அத்திரி மகரிஷி திருவண்ணாமலையில் தவம் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு வானத்து தேவர்களும், பூமியில் உள்ள ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் திருவண்ணாமலையில் ஒன்று கூடினார்கள்.
தனக்கென்று ஒரு தனித் தகுதியை வளர்த்துக் கொண்டு அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்...ஊருக்கெல்லாம் குண்டலினி சக்தியை சொல்லிக் கொடுத்தவர்... இன்று தெய்வங்களுக்கு நிகரானவர் என்று பாராட்டு பெற்றவர்... இவ்வளவு உயர்ந்த பீடத்திலிருந்து கடந்த 400 ஆண்டுகளாக காலமாக பொதுமக்களுக்கும் அருந்தொண்டாற்றி வருகிறவர், எதற்காக தவம் செய்கிறார்? என்பது நிறைய பேருக்குப் புரியவில்லை.
ஆனால் - அத்திரி ரிஷியோ இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.ஆலமரத்தின் விழுதுகளில் தலை கீழாகத் தொங்கி தவம் செய்ய ஆரம்பித்தார்.
அவரது தலைக்கு கீழே அக்னி தேவனால் உண்டாக்கபட்ட ஹோம குண்டம் இருந்தது.அதில் இருந்து அக்னி வெளியே வந்து கொண்டுருந்தது.பல்வேறு வாசனைத் திரவியங்கள்.140 மூலிகைகள்,202 பச்சை மூலிகைகள்,அரசமித்து,தாமரைப் புஷ்பங்கள் எல்லாம் மூட்டை மூட்டையாக அந்த ஹோம குண்டத்தில் தானாக கொட்டிக்கொண்டிருந்தன. இந்த மூலிகைகளின் நறுமன வாசம் திருவண்ணாமலை முழுவதும் பரவி எல்லோரையும் சுண்டி இழுத்தது.
இதுதான் ரகசியம்...
கண்ணை மூடிக் கொண்டு ஆலமரத்து விழுதின் உதவியோடு,கீழே அக்னி குண்டத்திற்க்கு மேல் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தாலும் ,தன்னைக் காண வந்த பொது மக்களது மனக் குறைகளையும் ஞானக் கண்ணால் அறிந்தார் அத்திரி.
"சித்தர் பெருமானே ! கீழிருக்கும் அக்னியின் வேகத்தை அருகில் நிற்கும் எங்களாலேயே தாங்க முடியவில்லை.தாங்களோ அக்னி குண்டத்திற்க்கு நேராக தலை கீழாகத் தொங்கி தவம் செய்கிறீர்கள்..இது எப்படி பெருமானே?என்று,கை கூப்பி அத்திரி மகரிஷியைப் பார்த்து கேட்டார் ஒரு பக்தர்.
அந்த பக்தனது காதில் அத்திரி மகரிஷி ஒரு அதிசயத்தை சொன்னார்.
"என்னை அக்னி பகவான் சுட்டெரிக்க மாட்டான்.அவன் தண்ணீராக மாறி,ஒரு நீருற்றுப் போல் எனக்கு குளிர்ச்சியைத் தருகிறான்.ஏனென்றால் அவனது வேண்டுகோள் பலவற்றை நான் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்..."
"அப்படியென்றால்,எங்களுக்கெல்லாம் இந்த வெப்பம் தாங்கமுடியவில்லையே...."
"அவ்வளவுதானே...இன்னும் 1/2 விநாடியில் இதே அக்னி உங்களுக்குத் தென்றலாக மாறி விடுவான்...பாரேன்" என்று அத்திரிச் சித்தர் சொன்ன மறு விநாடியே, அந்த அக்னி குண்டத்தில் இருந்து அதுவரை வெப்பமாக வீசிக் கொண்டிருந்த அக்னி குளிர்ந்த காற்றாக வீசத் தொடங்கியது.
அத்திரி எவ்வளவு பெரியச் சித்தர் என்று திருவண்ணாமலையில் உள்ள அத்தனை பேரும் வியந்து போனார்கள்.
சிவனின் திருவிளையாடல்
இந்நிலையில் அத்திரி மகரிஷியின் தவத்தை கலைப்பதற்காகவோ அல்லது அவர் எப்பேர்பட்ட மகத்தான சக்தியை பெற்றிருக்கிறார் என்பதை ஊர்,உலகத்திற்கு காட்டவோ என்னவோ அருணாசலேஸ்வரர் ஒரு திருவிளையாடலை நடத்தினர்.
அதையொட்டி இரண்டு எமகிங்கரர்களை அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு அனுப்பி,யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில் அத்திரிக்கு தெரியாமல் அந்த ஆலமரத்து விழுதுகளை வெட்டி விடச் சொன்னார்.
இப்படி செய்வதன் மூலம்,அத்திரி சித்தர் தன் தவ வலிமையை கொண்டு எப்படி அதை தடுத்துக் கொள்ள போகிறார் என்பதை அறியவும் அவர் ஆவலாக இருந்தார்.இன்னொன்று....இப்படி பல தடைகளைப் போட்டால்தான் அத்திரி மிகவும் உறுதியாகவும்,ஆழமாகவும் தவத்தை மேற்கொள்வார் என்பது அவரது கருத்தாக இருந்தது.
தேவியின் கோபம்
அருணாசலேஸ்வரரது நாயகியான உண்ணாமலை அம்மனுக்கு,தன் கணவர் ஏன் இப்படி அத்திரி சித்தரை கொடுமை செய்கிறார்?அப்படியென்ன உலகத்தில் இல்லாத வரத்தை கேட்டார்?அவருக்கு ஒரு துணைவி வேண்டும் என்றுதானே கேட்டார்.கொடுத்துவிட வேண்டியதுதானே..? என்று வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.
இதை அறிந்து கொண்ட அருணாசலேஸ்வரர்,"தேவி ! உன் மனதில் உள்ளதை யாம் அறிவோம்.எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.அவர்கள் கேட்டதை உடனடியாகக் கொடுத்துவிட்டால் தவத்திற்க்கு மகிமை இருக்காது. சித்தர்களின் உச்சக்கட்டத்தை அடைந்த அத்திரி மகரிஷிக்கு எதற்காக இல்லறத்தில் நாட்டம் ஏற்பட்டது ? என்பது தெரியவில்லை. சித்தர்கள் எல்லாவற்றையும் தாண்டியவர்கள், ஆசாபாசத்தை வென்றவர்கள்.அப்படிப்பட்ட தூய்மையை யாரும் கெடுக்கக் கூடாது. அதிலும் அத்திரி போன்றோர்களுக்கு இப்படிப் பட்ட ஆசை வரலாமா?" என்றார்.
"இதை நான் ஏற்க மாட்டேன் சுவாமி?"
"ஏன்?"
"சித்தர்களுக்கு எல்லாம் முதல் சித்தராகிய தாங்கள் என்னுடன் இல்லறம் நடத்துகிறீர்கள்.தாங்களே அதை செய்து விட்டு அத்திரி மகரிஷியைப் போய் "தவம்கிட" என்று விரட்டி அனுப்பலாமா சுவாமி?" என்றாள் உண்ணாமலை அம்பாள்.
"ஏதோ சொல்லப் போனால் என்னையே குற்றம் சாட்டுகிறாயே தேவி.அத்திரி மகரிஷி மட்டும் எனது சோதனையில் வெற்றி பெறட்டும்.அவருக்கும் அனுசூயா என்னும் தலை சிறந்த சித்தப் பெண்மணி மனைவியாக அமைவாள்.இது நடக்கத்தான் போகிறது".
"அப்படியென்றால் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று தன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டாள் அண்ணாமலைக்கரசி அம்மன்.
இதற்கிடையில் -
அருணாசலேஸ்வரர் உத்தரவிற்க்கு இணங்க ஓர் அமாவாசை நேரத்தில் இரண்டு எமகிங்கரர்கள் மாறு உருவத்தில் அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு வந்தனர்.நீண்ட வாளால் அத்திரி மகரிஷி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த விழுதை பலமாக வெட்டினர்.மரத்தில் இருந்து விடுபட்டது விழுது.
ஆனால் அந்த விழுது கீழே விழாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.அதன் வால் பக்கத்தில் அத்திரி சித்தரும் கீழே விழாது தொங்கிக் கொண்டிருந்தார்.இதைக் கண்டு வெலவெலத்துப் போனார்கள் அந்த இரண்டு எமகிங்கரர்களும்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் அகத்தியர்.
No comments:
Post a Comment