ஓம் வேறு ப்ரம்மம் வேறல்ல என்றே உபநிடதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஓங்காரத்திலுள்ள மூன்று அக்ஷரங்களும் சூக்கும நிலையில் நின்று காணப்படும் இந்தப் பிரபஞ்சத்தில் செயல்படுகின்றன. அதாவது முத்துச் சரம் நூலால் கோர்க்கப்பட்டிருந்தாலும், அந்த நூலானது வெளியாது இருப்பதைப் போலவும், தயிரில் நெய் போலவும், எள்ளில் எண்ணெய் போலவும் சூக்கும நிலையில் நின்று இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. ஓங்காரமே ப்ரம்மம். ஓங்காரமே ஆத்மா. பஞ்சாட்சரம், ராம நாமத்தைப் போல ப்ரணவமும் ஜெபிப்பதற்கு உகந்த, மிக உயர்ந்த மந்திரமாகும். உச்சரிக்க துவங்கும் போது மூலாதாரத்தில் துவங்கி ம் என்று முடிக்கும் போது உச்சியில் சகஸ்ராரத்தில் சென்று முடிவதை உணரலாம். அதற்கு இடையே அந்த ஒலியானது ஆறு ஆதாரங்களையும் கடந்து செல்கிறது என்பது சூக்குமம். அ, உ, ம என்ற மூன்றைத் தவிர நான்காவதாக மகாரத்தின் மேல் உள்ள புள்ளியே லிங்கமாகும். அதுவே தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் விளக்குவதாகும். இதை ஏன் ப்ரணவம் என்று சொல்கிறோம் ? என்றால், காரணம் இருக்கிறது. அதாவது, ''ப்ராணாந் ஸர்வாந் பரமாத்மரி பாரணாமயதி இதி ப்ரணவஹ.'' பாராணிகளை பரமாத்மாவிடம் நிலைக்கச் செய்யும் வல்லமை பெற்றிருப்பதால் ப்ரணவம் எனப்படுகிறது.
அ என்றால் சூரியன். உ என்றால் சந்திரன். ம் என்றால் அக்கினி. ஓம் என்பது அனைத்து பிரகாசமுள்ள வஸ்துகளின் சொரூபம்.
அ என்றால் ஸ்தூலம். உ என்றால் சூக்குமம். ம் என்றால் காரணம். ஓம் என்பது மூன்று சரீரங்களையும் குறிப்பதாகும்.
அ என்றால் ஸ்திரி. உ என்றால் பூமான்(புருஷன்). ம் என்றால் நபும்ஸகன். ஓம் என்பது லிங்க ஸமஷ்ட்டி.
அ என்றால் ருக் வேதம். உ என்றால் யஜூர் வேதம். ம் என்றால் ஸாம வேதம். ஓம் என்பதின் விரிவே ஸர்வ வேதங்களும்.
அ என்றால் காயத்ரீ சந்தஸ். உ என்றால் திரிஷ்ட்டுஸ்சந்தஸ். ம் என்றால் ஜகதீஸ் சந்தஸ். ஓம் என்பது எல்லா சந்தஸ்களையும்(விருத்தங்கள்) குறிக்கிறது.
அ என்றால் கார்ஹ பத்யாக்னி. உ என்றால் தக்ஷிணாக்கினி. ம் என்றால் ஆ ஹவ னீயாக்னி. ஓம் என்பது ஸர்வ அக்னி ஹோத்ராதி கர்மங்களையும் குறிக்கிறது.
அ என்றால் ஹரஸ்வம். உ என்றால் தீர்க்கம். ம் என்றால் ப்லுதம். ஓம் என்பது மூன்று வித ஸ்வரங்களின் கூட்டம்.
அ என்றால் பாதம். உ என்றால் நாபி. ம் என்றால் சிரசு. ஓம் என்பது ஸர்வ அவயங்களோடு கூடிய தேகத்தை குறிப்பதாகும்.
அ என்றால் புத்தி. உ என்றால் மனம். ம் என்றால் அஹங்காரம். ஓம் என்பது ஸர்வ அந்தகரண ஸமஷ்ட்டி.
அ என்றால் ரஜோ குணம். உ என்றால் ஸத்வ குணம். ம் என்றால் தமோ குணம். ஓம் என்பது சகலவிதமான குணபேதங்களுக்கு ஆதாரமாக நிற்கும் மாயையைக் குறிப்பதாகும்.
அ என்றால் சிவப்பு. உ என்றால் கபில வர்ணம். ம் என்றால் கறுப்பு. ஓம் என்பது ஸர்வ வர்ணங்களின் பேதம்.
அ என்றால் பூரகம். உ என்றால் கும்பகம். ம் என்றால் ரேசகம். ஓம் என்பது ப்ராணாயாமாப்பியாஸமான யோகத்தைக் குறிப்பது.
அ என்றால் நாதம். உ என்றால் பிந்து. ம் என்றால் கலை. ஓம் என்பது நாத, பிந்து, கலைகளின் ஸமஷ்ட்டி.

அ என்றால் கிரியா சக்தி. உ என்றால் இச்சா சக்தி. ம் என்றால் ஞான சக்தி. ஓம் என்பது மூன்று சக்திகளின் பூரண சொரூபம்(ப்ராஹமணீ வைஷ்ட்ணவீ ரௌத்ரீ).
அ என்றால் பிரம்மா. உ என்றால் விஷ்ணு. ம் என்றால் ருத்திரன். ஓம் என்றால் மும்மூர்தந்திகளின் சொரூபம்.
அ என்றால் வஸூக்கள். உ என்றால் ருத்திரர்கள். ம் என்றால் ஆதித்தியர்கள். ஓம் என்றால் ஸர்வ தேவகண கூட்டங்களை குறிப்பதே.
அ என்றால் சென்ற காலம். உ என்றால் நிகழ் காலம். ம் என்றால் எதிர்காலம். ஓம் என்பது முக்காலங்களையும் குறிக்கிறது.
அ என்றால் ஜாக்கிரதை. உ என்றால் சொப்னம். ம் என்றால் ஸுஷுப்தி. ஓம் என்பது அவஸ்தைகளோடு கூடிய ஜீவாத்மனைக் குறிப்பது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அகாரம் என்றால் எட்டு, உகாரம் என்றால் இரண்டு. சித்தர்கள் கூறும் இரகசியக் குறியீடான எட்டிரண்டு என்பது பிரணவத்தின் பகுதியே. ஆக ஓம் என்ற மந்திரமானது ஸர்வ நாமரூப கர்மங்களினால் எல்லாப் பிரபஞ்சத்தையும் சேர்த்துக் காட்டுகிறது. ஓம் என்று சொன்ன மாத்திரத்தில், சொல்பவனைப் ப்ரம்ஹத்திடம் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது ஓம் என்னும் ப்ரணவமாகும். ஓம் என்பது மஹா புனிதமான அக்ஷரம். அதாவது அழியாப் பொருள். எனவே ஓங்காரத்தை தியானிப்பதை விட சுலபமான உபாயம் வேறு இல்லை. எனவேதான் இவ்வளவு விளக்கங்களும் தரப்பட்டன. உண்மையை உணர்ந்து தியனிப்பவர்கள் எளிதில் மேன்மை அடையலாம். இது சத்தியம்.
No comments:
Post a Comment