எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, February 14, 2017

திருவள்ளுர் அஷ்ட லிங்கங்கள்



திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் - திருவேற்காடு வேதபுரீஸ்வரர்  சந்நிதானத்தைச் சுற்றிலும் அருள் தரும் அஷ்டலிங்கங்களாக ஒவ்வொரு திக் பாலகரது திருநாமத்தைக் கொண்டு விளங்குகின்றன. ஒவ்வொரு லிங்கமும்  தனித்தனியான வாழ்க்கை நலன்களை அருள்பவை என்றாலும் அவற்றை ஒரே நாளில் 18 கி.மீ. எல்லைச் சுற்றுக்குள் தரிசித்து விடுவதே சிறப்பானது.  அந்த வரிசையில் எண்கயிலாய தரிசனமாக, சென்னையின் தென்பகுதியான தொண்டை மண்டலத்தில் வள்ளிக் கொல்லைமேடு, நூம்பல், செந்நீர்கு ப்பம், பாரிவாக்கம், மேட்டுப்பாளையம், பருத்திப்பட்டு, சுந்தர சோழபுரம், சின்னக்கோலடி ஆகிய தலங்களை வழிபடலாம்.

இனிமை தரும் இந்திர லிங்கம்:- வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேர் கிழக்காக வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் இந்திரசேனாபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். பதவி உயர்வு, அரசு அனுகூலம் பெற்றுத் தருகிற இந்த சுவாமியை நெய்தீபம் ஏற்றி வைத்து    வழிபடவும்.

இடர்களையும் அக்கினி லிங்கம் அகத்தியர் தனித்து பூஜை செய்த லிங்கமாக ஆனந்தவல்லி உடனுறையும் அகத்தீஸ்வரராக தென்கிழக்கு திசையில் நூம்பல் என்ற தலத்தில் அருள் தரும் இவர் முன் நெய்தீபம் ஏற்றினால்      வழக்குகளில்    வெற்றி      உண்டாகும்.

எதிர்க்கும் வினைகளையும் எம லிங்கம் மரகதாம்பிகை உடனுறை கைலாசநாதர் எனும் திருநாமத்துடன் பூந்தமல்லி, ஆவடி சாலையில் தென்திசை லிங்கமாக செந்நீர்குப்பம் என்ற தலத்தில்  சிவமூர்த்தங்களோடு கருங்கற்கோயிலில் காட்சி தருகிறார். ஏழரைச்சனி, கண்டச்சனி விலகி, இரும்புத் தொழிலில் முன்னேற்றம் காண நெய்தீபம் ஏற்றி      வணங்குங்கள்.

நிம்மதி அருளும் நிருதி லிங்கம் : வேதபுரீஸ்வரர் சந்நதியிலிருந்து தென்மேற்கு திசையில், சுமார், 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக ஓலைச்சுவடிச் செய்திகளோடு பாலாம்பிகை  உடனுறை பாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் பூந்தமல்லி, பட்டாபிராம் இடையில் பாரிவாக்கத்தில் (மகாநாடு நிறுத்தத்தில்) அருள்கிறார். கொடுத்த  கடன் திரும்பவும், உறவினர் மூலம் நன்மை பெறவும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
               
உடல் திறன் கூட்டும் வருண லிங்கம் : வேதபுரீசர் கோயிலிலிருந்து மேற்கு திக்கில் மேட்டுப்பாளையம் என்ற பூமியில் ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வர சுவாமி என்ற திருநாமத்துடன் ஆலயம் இன்றி வெட்டவெளியில் அருள்  தருகிறார். புத்திரப்பேறு, நோய் நீக்கம், விவசாய விருத்தி போன்ற பலன்கள் பெற நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். பூந்தமல்லி - ஆவடி  சாலையில் காடுவெட்டி என்ற இடத்தில்  உள்ளது.

குறைவிலா செல்வம் தரும் குபேர லிங்கம் :- ஆவடி-திருவேற்காடு சாலையில் வடக்கு திசை லிங்கத் திருமேனியாக சுந்தர சோழபுரம் என்ற தலத்தில் வேம்புநாயகியோடு குபேரபுரீஸ்வரர் ஏகதள விமானக் கருவறையில் அருளாட்சி செய்கிறார். பைரவர், வாயு தேவர், துர்க்கை, நவநாயகர் மற்றும் சத்திய நாராயணருடன் அருள் தருகிறார். ஆலய வரலாற்றுக் குறிப்பைக் காணும்போது இவ்வூரில் சுந்தரன் என்ற சோழ அரசன் சிலகாலம் ஆட்சிபுரிந்தமையால் சுந்தர சோழர்புரம் என்ற பெயர் நிலைத்ததாக உள்ளது. இத்தல ஈசனை வழிபட பொருட் சேர்க்கையோடு சகல சம்பத்துக்களும் கிட்டும்.

வாழ வழி காட்டும் வாயு லிங்கம் :- வேற்காட்டீஸ்வரர் தலத்திலிருந்து வடமேற்கு திசையில்  விருத்தாம்பிகை உடன் வாழவந்த வாயுலிங்க மூர்த்தியாக அழகான சிவாலயத்துள், சிவமூர் த்தங்களோடு அருள் தருகிறார். ஆவடி சாலையில் பருத்திப்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனி அருகே  இலவம்பஞ்சு மரங்களின் காய்கள் வெடித்துச் சிதறுவதால் பஞ்சுகள் இறைவன் மேல் படர்வதால் அப்பெயர் நிலைத்து விட்டது. சந்நதியில் நெய்தீபம்  ஏற்றி துதி கூறி வழிபட இழந்த பொருளை மீட்பீர்கள்.  

எடுத்த செயல் முடிக்க வைக்கும் ஈசான லிங்கம் :- வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து வடகிழக்கு திசையில் திருவேற்காடு - கோலடி சாலையில் சின்னக்வகோலடி என்ற இடத்தில் வெட்ட வெளிச்  சிவலிங்கமாக நானேஸ்வரி உடனுறையும் ஈசான சிவன் அருள் தருகிறார். தொண்டை மண்டல கோட்டத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் எப்போதும் ஒரு  செயல் வெற்றியாக ஈசனை லிங்க வழிபாடு செய்தபின்பே புறப்பட்டுச் சென்றதாக கால வரலாறு சொல்கிறது. வீடு கட்ட இயலாமை, காரியத் தடை,  கண் திருஷ்டி, வண்டி வாகனத்தில் லாபம் இல்லாமை ஆகியவை விலகிட நெய்தீபத்துடன் நல்லெண்ணெய் ஏற்றி வணங்க   வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் உள்ள திருவேற்காடு தலத்தை மையமாக வைத்து இந்த லிங்கங்கள் எட்டையும் சுமார் மூன்று மணி நேரத்திற்குள்  ஆட்டோ அல்லது கார்களில் சென்று வழிபட்டு வரலாம். இந்த ஊரின் சோமவார வழிபாட்டுக் குழுவினரும் அஷ்டலிங்கத் தரிசன குழுவும் எண் கயிலாய தரிசன சேவைக்கு உதவுகின்றனர்



No comments:

Post a Comment