காவிரிப்பூம் பட்டினத்து பல்லவனீச்சரம் திருப்பதிகம்
*"குடகு மலையில் இருந்து புறப்படும் காவிரி ஆறு கடலுக்குள் புகும் பட்டினம் ஆதலால் இது "காவிரி பூம்பட்டினம்" எனப்பட்டது, இப்பழம் பெருமை வாய்ந்த பட்டினத்திற்கு "புகார்" என்றும் பெயர் உள்ளதால் இதனை "பூம்புகார்" என்றும் கூறுவர்"*
*"நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ் மன்னும் புகார் நகர்"* என்றும் *"பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்"* என்றும் குறித்து மகிழ்வார் இளங்கோவடிகளார்
சிலப்பதிகாரத்தில் *"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்"* என்று இந்நகரில் இருந்த சிவாலயங்கள் பற்றியும் முருகாலயங்கள் பற்றியும் குறிப்பு வருகின்றது, பண்டைய பூம்புகாரில் எத்தனை சிவாலயங்கள் இருந்தன என்று தெரியவில்லை, செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவற்றால் ஆன அவை காலத்தால் அழிந்திருந்தாலும் தற்போது *"பூம்புகார் ஊருடன் தொடர்புடைய இரண்டு சிவாலயங்களே உள்ளன அவை பூம்புகார் சாய்க்காடு, காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம்"* என்பதாம்.
தற்காலத்தில் சாய்காடு தலம் சாயாவனம் என்ற தனிப்பகுதியாகவும், பல்லவனீச்சரம் தனிப்பகுதியாகவும் அறியப்படுகிறது, பூம்புகார் என்ற மாநகரம் தற்போது பரதவர்கள் வாழும் கடலோரப் பகுதியாக மட்டுமே அறியப்படுகிறது ஆயினும் *"நம் பிள்ளைப் பெருமானார் இரண்டு தலங்களையும் பூம்புகாரில் உள்ள தலங்களாகவே குறிக்கிறார் ஆகையால் சுவாமிகளின் காலத்தில் கடற்கரையில் இருந்து தற்போது உள்ள மேலையூர் வரை பூம்புகாராகவே அறியப்பட்டிருந்தது என்பது தெளிவாகும்"* *"இல்லையே என்னாத இயற்பகை நாயனாரும், பட்டினத்து பெருமானும் திருவவதரித்த புண்ணிய பூமி இது"*
இதில் இன்றைய பதிவிற்குரிய பல்லவணீச்சரம் இருக்கும் பகுதியே பட்டினத்தார் அவதாரம் செய்த இடமாகும், இங்குள்ள இறைவருக்கு பிரம்மோற்சவம் கிடையாது, படினத்தாருக்கே பன்னிரண்டு நாள் விழா நடக்கிறது, விழா நிறைவில் சுவாமிகள் இறைவரிடம் ஐக்கியம் ஆகும் விழா பெரிதாக கொண்டாடப் படுகிறது
*"மயிலாடுதுறையில் இருந்தும் சீர்காழியில் இருந்தும் பூம்புகார் செல்லும் பேருந்துகளில் மேலையூர் கடந்து வரும் "மாதவித் தோரணவாயில்" என்ற இடத்தில் இறங்கினால் நடக்கும் தொலைவிலேயே சாலையோரத்தில் இத்தலம் அமைந்துள்ளது"*
*"ஆலம் உண்டானை பாலை உண்டவர் தோடுடைய செவியன் என்று பாடி கூடிய மகிழ்ச்சியில் கோலக்காவும் பாடியபின் நனிபள்ளிக்கு தம் இரண்டாம் பயணச்செலவாக புறப்பட்ட பொழுது எழுந்தருளி பாடப்பெற்றது இத்தலமாம், இத்தலத்திற்கும் அருகிருக்கும் சாய்க்காட்டிற்கும் நமையாளுடைய பிள்ளையார் இரண்டு முறை எழுந்தருளி பாடியது எண்ணி இன்புறத்தக்கதாம்"*
*"வானமாள்வதற்கு ஊனம் ஒன்றிலை மாதர் பல்லவன் ஈச்சரத்தானை ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே"* என்ற கடைக்காப்பு வைத்து *"இவர் தன்மை யாரறிவார்!?"* என்று வினாவுரையாக பெருமான் பாடிய பதிகம் இது
பண்: பழம்பஞ்சுரம் *பாடல்*
பரசுபாணியர் பாடல்வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்.
பட்டநெற்றியர் நட்டமாடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இட்டமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்
பவளமேனியர் திகழுநீற்றினர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார் இவர்தன்மையறிவாரார்.
*பொருள்*
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர் . வீணையில் பாட்டிசைப்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர் . இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ? ஒருவரும் அறியார் .
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர் . திருநடனம் செய்பவர் . காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர் , ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?
திருப்பரிதிநியமம் திருப்பதிகம்
*"பரிதி ஆகிய சூரியன் வழிபாடு செய்தமையால் இது பரிதிநியமம் எனப்பட்டது தற்காலததே பருத்தியப்பர் கோயில் என்று அழைக்கப் படுகிறது"* தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் உள்ள மேலஉள்ளூர் என்ற இடத்தில் இருந்து 2கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது

*"தக்கன் சிவநிந்தனை செய்து நிகழ்த்திய வேள்வியில் பங்கேற்ற குற்றம் நீங்குவதற்காக சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட போது அத்தோஷம் இங்குதான் நீங்கியது, இத்தல நந்தியெம் பெருமானுக்கு பின்புறம் பெரிய உருவினனாய் சூரியன் வழிபடு கோலத்தில் சுவாமி சன்னதியை நோக்கி நிற்பது வேறு எங்கும் கண்டற்கரியதாம்"*
ஆண்டுதோறும் பங்குனி மாதம் 17,18,19,20 தேதிகளில் சூரிய கிரணங்கள் நேரடியாக கருவறையில் விழும் அற்புதம் நிகழ்கின்றது, *"பஞ்ச பாஸ்கர தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இத்தலத்தில் தினம் அரூபமாக மார்க்கண்டேயர் வந்து பூசிப்பதாக ஐதீகம் நிலவுகிறது"* நன்றிசிவதீபன் ( a copied post from https://www.facebook.com/arunaajothy)
No comments:
Post a Comment