
ஓஷோவின் துணிச்சலுக்கு ஒரு சில உதாரணங்கள். தன் வீட்டுக்கு வந்த ஒரு நிர்வாண ஜைனத் துறவியிடம் அவர், "நீங்கள் ஒருபோதும் இந்த உலகத்தில் மீண்டும் பிறக்க விரும்ப வில்லையா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த துறவி, "ஒருபோதும் இல்லை" என்று பதில் சொன்னதும், "அப்படியானால் நீங்கள் ஏன் இப்பொழுதே தற்கொலைசெய்து கொள்ளக்கூடாது? நான் அதற்கு வழி சொல்லிக்கொடுக்கிறேன். பக்கத்தில் உள்ள மலையில் ஏறி சுலபமாக விழலாம். அல்லது பக்கத்தில் ஓடும் ஆற்றில் மூழ்கி இறக்கலாம். நல்ல மழைக்காலத்தில் நிறைய தண்ணீர் ஆற்றில் போகும். அப்பொழுது உங்களோடு நானும் குதிக்கிறேன். சிறிது நீந்திவிட்டு நான் கரை சேர்கிறேன். நீங்கள் அப்படியே ஆற்றில் மூழ்கிவிடலாம். என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார்! இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஓஷோவுக்கு 12 அல்லது 13 வயது! தனக்குக் கிடைத்த தங்க மெடலை ஆற்றில் எறிந்திருக்கிறார்! பள்ளி கல்லூரிகளில் படித்த பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களையும் கொளுத்திவிட்டிருக்கிறார்!
ஓஷோவைப் பொறுத்தவரை அவரை எது அல்லது எவர் அல்லது எவரெவர் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தினார்கள் என்று தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆசைப்பட்டேன். இதுவரை நான் படித்த அவரின் எந்த நூலிலிருந்தும் அதை நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடைசியாக "என் இளமைக்கால நினைவுகள்" என்று ஒரு நூல். அதைப்படித்தபோது தெரிந்துவிட்டது. நூறுடிகிரிவரை அவர் எப்படிச் செல்ல முடிந்தது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப்பற்றிச் சொல்லத்தான் இவ்வளவு பீடிகையும்.
இந்தப் புத்தகம் ஓஷோ ஒரு நாலு நாளாக உடல் நலக்குறைவாக இருந்தபோது, சீடர்களை அழைத்து, தன் குடும்பத்தைப் பற்றியும் தன்னை பாதித்த மனிதர்களைப் பற்றியும் அவரே சொல்லச் சொல்ல எழுதப்பட்டது. ஒரு முழுமையான தொடர்ச்சியான வாழ்க்கை வரலாறு அல்ல. ஆனால் ஓஷோவைப்பற்றி இதுவரை வந்த நூல்களில் இது மிகவும் முக்கியமான நூல். இப்படிச் சொல்வதற்கு முதல் காரணம், மேலே சொன்னதுதான். நூறுடிகிரிவரை அவரை கொண்டு சென்றது எது என்று இந்த நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது காரணம், ஓஷோ சம்மந்தபட்ட சின்ன வயது நிழல்படங்கள். ஓஷோ பதினாலு வயதில், 21 வயதில், ஓஷோவின் நானி, சம்பு பாபு, மக்கா பாபா போன்ற ஓஷோ வாழ்வின் மிக முக்கியமானவர்களின் நிழல்படங்கள் இருப்பது. மூன்றாவது காரணம், அருமையான தமிழாக்கம். சுவாமி ஆனந்த பரமேஷ் என்பவர் செய்திருக்கிறார்.
ஓஷோவை பாதித்த, உருவாக்கிய மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஓஷோவே எப்போதும் போல ஒளிவு மறைவின்றிப் பேசுகிறார். அதில் முதலில் மனதில் நிற்பது ஓஷோவின் நானி (பாட்டி)தான். இவரின் நிழல்படமும் உள்ளது. அந்த நானியைப் பற்றிப் படிக்கப்படிக்க இப்படி ஒரு பெண் அந்தக்காலத்திலேயே இருந்திருக்க முடியுமா என்று வியப்பு மேலிடுகிறது. அப்படி ஒரு பாட்டி நமக்கு இல்லையே என்ற ஏக்கம்கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நானி வாய்க்கும் அனைவருமே நிச்சயமாக ஞானமடைந்துவிடுவர் என்று கூறமுடியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பாத்திரம்!
அழகான அந்த நானி பிறந்த ஊர் கஜூரஹோ! அந்த கோவிலின் சிற்பங்களை அவசியம் ஓஷோ பார்க்க வேண்டும் என்று நானி வற்புறுத்தியிருக்கிறார்! ஆனால் அவர் எந்த கோயிலுக்கும் சாமி கும்பிடச் சென்றதில்லையாம்! ஓஷோ பிராந்தி சாப்பிட விரும்பினால் நானி அதற்கு ஏற்பாடு செய்வாராம்! அதற்கு அவர் சொன்ன காரணம், "ஒன்றை நீ முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், அதிலிருந்து உன்னால் விடுபடமுடியாது"! இன்னொரு முறை தீபாவளியின்போது எல்லாரையும்போல சூதாட பணம் கேட்டபோது, "இந்தா நூறுரூபாய், போய் விளையாடு. ஒருவன் அனுபவத்தின் மூலமாகத்தான் பாடம் கற்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்! இதேபோல ஓஷோ சிகரெட் பிடிப்பதற்கும், விபச்சாரியிடம் செல்வதற்கும்கூட அனுமதித்திருக்கிறார். அப்போது ஓஷோவின் வயது 15! (ஆனால் ஓஷோ விபச்சாரியிடம் போகவில்லை என்பது வேறுவிஷயம்).
தன் கணவர் இறந்தபோது நானி சொட்டுக்கூட கண்ணீர் சிந்தவில்லையாம். இவ்வளவுக்கும் அந்தக் காலத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டவராம். ஓஷோ -- அப்போது சின்னப்பையன் -- மடியில்தான் நானாவின் -- நானியின் கணவர், ஓஷோவின் பாட்டனார் -- தலை இருந்ததாம். நானி அழாததைப் பார்த்து ஓஷோவுக்கு ரொம்ப ஆச்சரியம். "நானா இறந்துவிட்டார். நீ எவ்வளவு தூரம் அவரை நேசித்தாய் என்பது எனக்குத் தெரியும். ஏன் உன்னிடமிருந்து ஒரு சிறு செருமல்கூட வரவில்லை"
என்று ஓஷோ கேட்டதற்கு நானி,
"உன்னால்தான் அழவில்லை. ஒரு குழந்தையின் முன்பு நான் அழவிரும்பவில்லை. நான் அழ ஆரம்பித்தால் நீயும் அழுவாய். அப்போது நான் உனக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கும். யார் யாருக்கு ஆறுதல் சொல்வது?" என்று பதில் சொன்னாராம்! பாட்டி இரும்பால் செய்த பெண்மணியோ, புரியவே இல்லை என்று ஓஷோவே வியக்கிறார்!
அந்த இறுக்கமான சூழ்நிலையைத் தன்னால் தாங்கமுடியவில்லை, ஏதாவது பேசுங்கள் என்று நானியிடம் ஓஷோ சொன்னபோது நானி ஒரு காதல் பாட்டைப் பாடினாராம்! நானா உயிருடன் ஆரோக்கியமாக இருந்தபோது அவருக்காக நானி பாடிய முதல் காதல் பாடலாம் அது! "இறப்பை எப்படிக் கொண்டாடுவது என்பதை அப்பொழுது நான் கற்றுக்கொண்டேன்" என்று ஓஷோ கூறுகிறார்!
நானி இறந்தபோது அவருக்கு அவரின் ஆசைப்படி தீவைத்தவர் ஓஷோதான். "என் வாழ்க்கையில் நான் மிகுந்த சிரமத்தில், துக்கத்தில் செய்த காரியம் அவரது உடலுக்குத் தீவைத்ததுதான். அது எப்படி இருந்தது என்றால், லியனார்டோ மற்றும் வின்சென்ட் வான்ஹோ தீட்டிய ஒரு அழகிய ஓவியத்திற்கு நெருப்பு வைத்தால் என் உள்ளத்தில் எப்படி வலி ஏற்படுமோ, அந்த வலியை உணர்ந்தேன்...இந்த உலகத்தில் பார்க்கும் அழகு நிறைந்த பொருள்களில் எல்லாம் அவரைக் காண்கிறேன். அவர் மட்டும் என் வாழ்க்கையில் கலக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு வியாபாரியாகவோ, டாக்டராகவோ, இஞ்சினியராகவோ ஆகியிருப்பேன்" என்று சொல்கிறார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து கிளம்பும் உணர்ச்சிகள்தான் எவ்வளவு அழகானவை, உண்மையானவை!
ஒஷோவின் நானாவும் ரொம்ப வித்தியாசமான மனிதராகத்தான் இருந்துள்ளார். ஒருமுறை ஜனத்தொகை கணக்கெடுப்பின்போது நானாவிடம் உங்கள் மதம் என்ன என்று கேட்டதற்கு, "ஜைன மதம்" என்று சொன்னவர், உங்கள் மனைவியும் அதே மதத்தைச் சேர்ந்தவரா என்று கேட்டபோது, "அவளையே கேட்டுக்கொள்ளுங்கள். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்" என்று பதில் சொன்னாராம்! ஆனால் எதைக்கண்டாலும் அவர் பயப்படுவாராம். "அவர் ஒரு அழகான, அருமையான, அன்பு நிறைந்த எலி" என்கிறார் ஓஷோ!
நானா நானியைத் தவிர, சம்பு பாபு, மக்கா பாபா, பாகல் பாபா, மஸ்தா பாபா என்ற நான்குபேர் ஓஷோவை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். சம்பு பாபு ஓஷோ படித்த பள்ளிக்கூடத்தின் இணை தாளாளராக இருந்தவர். தனது 50ஆவது வயதில் அவர் ஒன்பது வயது சிறுவன் ரஜனீஷோடு (ஓஷோ) மிகுந்த அன்புடனும் நட்புடனும் இருந்திருக்கிறார். அவர் மறுபிறப்பெடுத்து தனது ஆசிரமத்துக்கு வருவார் எனவும், அவர் ஞானமடையாததற்குக் காரணம் அவரது அறிவுக்கூர்மைதான்(!) எனவும் ஓஷோ கூறுகிறார்!
மற்ற மூன்று பாபாக்களும் சூ·பிகள். சூ·பிகளோடு நெருங்கிய தொடர்பு ஓஷோவுக்கு இருந்திருக்கிறது. தனது 27 வது வயதில் ஒரு சூ·பி அமைப்பில் சேர்ந்துவிடவும் முயன்று பின்பு ஒத்துக்கொள்ளாமல் வெளியே வந்திருக்கிறார். எந்த அமைப்போடும் ஓஷோ என்று தனிப்பட்ட ஆளுமையால் ஒன்ற முடியவில்லை. ஆனால் மூன்று பாபாக்களும் தனிமனிதர்கள். எந்த அமைப்போடும் சம்மந்தப்படாதவர்கள். பைத்தியக்காரர்கள் என்று ஊர் மக்களால் நினைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டும் அதேசமயம் மரியாதை செய்யப்பட்டும் வந்தவர்கள்.
"அவர் என்ன ஆன்மீகமாக மேம்படுத்தினார். அவர் அருகில் இருக்கும்பொழுது என் உள்ளத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அவைகளை இதுவரை நான் அறிந்ததில்லை" என்று மக்கா பாபா பற்றி ஓஷோ கூறுகிறார். அதோடு 21ஆவது வயதில் ஞானமடைந்த பிறகு ஓடிச்சென்று மக்கா பாபாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார் ஓஷோ. பதிலுக்கு 90 வயது மக்கா பாபாவும் ஓஷோவின் கால்களில் விழுந்தது சூ·பிகளுக்கே உரிய வேறு விஷயம்!
"நான் எதற்காக மக்கா பாபாவிடம் சென்றேன் என்றால், நான் ஞானம் அடைந்ததை இன்னொரு உண்மையான ஞானி அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று ஓஷோ கூறுகிறார். இந்த மக்கா பாபா ஓஷோவைத்தவிர வேறு யாரோடும் பேசியதே இல்லையாம்!
நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டுமல்ல. வீட்டுவேலை செய்தவர்கள்கூட கற்பனை செய்யமுடியாத அளவுக்கு வித்தியாசமான மனிதர்களாக, ஒரு ரஜனீஷ் ஓஷோவாக முழுமாற்றம் அடைய உதவக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். போரா என்று ஓஷோவின் நானாவிடம் ஒரு பணியாள் இருந்தார். நானா இறந்தபோது அவர்தான் மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு போனவர். மேலே சொன்ன நானி அழாத நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது.
நானாமீது மிகவும் பிரியம் வைத்த போராவாவது திரும்பிப் பார்க்கக் கூடாதா என்று ஓஷோ பிற்பாடு கேட்டதற்கு, "இறப்பு என்பது ஒரு தனிப்பட்டவரது சமாச்சாரம். நான் எதற்கு அதைப்பார்க்க வேண்டும்? நீங்களும் நானியும் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டவாறுதான் இருந்தேன். அப்போது கதறி அழ நினைத்தேன். அந்த துக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அவரை மிகவும் நேசித்தேன். ஒரு அனாதை ஆகிவிட்டதுபோல் உணர்ந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. அப்படிச் செய்திருந்தால் அவர் என்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டார்" என்று பதில் சொல்லியிருக்கிறார்! என்ன வினோதம்! இந்த போரா, நானாவின் இறப்பைத் தாங்கமுடியாதவராக அவர் இறந்த கொஞ்ச நாட்களிலேயே தானும் இறந்து போயிருக்கிறார்!
இப்படி ஓஷோவின் வாழ்வில் அவரைச் சுற்றி இருந்த மனிதர்கள் ஒன்று ஞானிகளாக இருந்திருக்கிறார்கள். அல்லது ஞானத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தவர்களாக இருந்துள்ளார்கள். விஞ்ஞானம், தொழில் நுட்பம், அரசியல் போன்ற விஷயங்களால் மாசு படுத்தப்படாமல் அந்தக்காலத்தில் மனிதர்கள் கசடு, கவடு அற்றவர்களாக வெள்ளையாக கள்ளங்கபடமில்லாமல் இருந்ததுதான் இதற்கெல்லாம் காரணமோ என்று தோன்றுகிறது.

நம்முடைய சொந்த பந்தங்கள் மற்றும் நட்பின் நிலை சொல்ல வேண்டியதில்லை. நாமாகவே கொதிநிலையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாலும் பத்தடி உறைநிலைக்கு நம்மை இழுப்பதாகவல்லவா உள்ளது! ச்சீ ச்சீ இந்த ஞானப்பழம் புளிக்கும் என்று கைவிட்டுவிட்டு ஓட வேண்டியதாகி விடுகிறது. 99 டிகிரிகளையும் நாமே நமக்கு உருவாக்கிக் கொண்டுதான் நூறாவது டிகிரிக்காக தயாராக காத்திருக்க வேண்டியுள்ளது.
நாம் நம்மை தயாராக்கிக் கொள்ள வேண்டும். ஒருபொருள் இன்னொரு பொருளாக பரிபூரணமாக மாறவேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும் .... A copied post from ... (https://www.facebook.com/krishnapranav.moorthy)
ஓஃம் 🙏
ReplyDelete