எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, September 17, 2018

மஹான்களின் தேசம் - 3

ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகள் 

விழுப்புரத்தில் இருந்து சுமார் 16 கீ.மி. தொலைவில் உள்ள கல்பட்டு என்கிற கிராமத்தில் 28.12.1871 அன்று தோன்றினார் ஸ்வாமிகள். இவருடைய தந்தையார் ராமசாமி சாஸ்திரிகள். தாயார் ஜானகி குழந்தைக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற நாமகரணம் சூட்டினர் பெற்றோர். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மகனை சாஸ்திரம், வேதம் முதலானவற்றைக் கற்று தேர்வதற்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார் தந்தை. ஏழாவது வயதில் உபநயனம், திருவிடைமருதூரில் ஆங்கிலக்கல்வியில் தேர்வு 19வது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி நாராயண சாஸ்திரிகளிடம் தர்க்கம், மீமாம்சம், வியாகரணம் முதலானவற்றைக் கற்றது, தவிர தமிழில் புலமை பெற தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருக்குறள் முதலானவற்றைக் கற்றல் என்று போனது ஸ்வயம்பிரகாசரது கல்விக் காலம்.

குடும்பம் என்ற பந்தத்தில் இருந்து விடுதலையாகி. வாரணாசி சென்று மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள். திருவண்ணாமலை தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியோரிடம் அனுக்கிரகம் பெற்றார். மதுரையில் ஜட்ஜ் ஸ்வாமிகளிடம் சந்நியாசம் ஏற்று உபதேசம் பெற்றார். அப்போது ஜட்ஜ் ஸ்வாமிகள், இடுப்பில் ஒரே வஸ்திரத்துடன் உன் தாயாரிடம் செல். அவரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தித்து நமஸ்காரம் செய். அங்கேயே சிறிது நேரம் இரு. அதன்பின் உனது விருப்பப்படி அவதூதம் நிகழும். நீ விரும்பியபடி ஆன்மிக பலத்தைப் பெறுவாய். இறைவன் அருள் உனக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்று அருளினார். அதன்படியே ஸ்வயம்பிரகாசர் அன்னை இருந்த இடத்துக்குச் சென்று அவரை மூன்று முறை வலம் வந்து. அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். புறப்படலாம் என்று அவர் எழுந்தபோது, அவரை அறியாமலேயே அவர் இடுப்பில் இருந்து ஏகவஸ்திரம் நழுவி பூமியில் விழுந்தது. ஸ்வயம்பிரகாசர் அவதூதப் பரம்பரையில் தன்னைச் சேர்த்துக்கொண்டது இப்படித்தான். அப்போது ஸ்வாமிகளுக்கு வயது 28.
-
அவதூதராகிப் பல தங்களுக்கு ஸ்வாமிகள் சென்றபோதெல்லாம் அறியாமையால் பலரும் அவர் மீது கல் எறிந்தார்கள். கிண்டல் செய்தார்கள். அவருக்கு நெருப்பு வைத்தார்கள். சந்நியாச வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்வாமிகள் கோபப்படவில்லை. பிறருடைய தவறான செயல்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரினர். பாதயாத்திரையாகவே பல தலங்களுக்கும் சென்றார். சுமார் 18 ஆண்டுகள் அவருடைய யாத்திரை நீடித்தது. மகானின் காலடி பட்டதால் அந்த இடங்கள் புனிதமாயின. இறுதியில் சேந்தமங்கலம் வந்து ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்தார். 

ஒரு முறை, திருச்சி-கரூர் இடையே உள்ள லாலாபேட்டை என்ற கிராமத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி நதியை, ஸ்வாமிகள் கடக்க நேரிட்டது. அப்போது அவர் திகம்பரராக இருந்தால் பரிசலில் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர் பரிசல் ஓட்டிகள். பரிசலில் அவர் ஏறினால் மற்ற பயணிகள் அருவருப்படைந்து இறங்கிவிடுவார்களே, தங்களது வருமானம் போய்விடுமே என்று பரிசல் ஓட்டிகள் கவலை கொண்டனர்.

பார்த்தார் ஸ்வாமிகள் தன் கையில் அப்போது வைத்திருந்த பனை ஓலை விசிறியை வெள்ளத்தில் மிதக்கவிட்டார். அதன் மீது ஏறி நின்று பயணித்து, ஆற்றின் மறு கரையை அடைந்தார். பரிசலில் இருந்தவர்களும் பரிசல் ஓட்டிகளும் அவருடைய சித்து வேலையைக் கண்டு பிரமித்து. மறு கரைக்கு வந்தவுடன் அவருடைய கால்களில் விழுந்து தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டனர். சித்து வேலை என்பது அந்த நேரத்தில் கூடி வருவது! இதை செய்யப்போகிறேன் என்று எவரும் முன்னறிவிப்பு கொடுத்து செய்துகாட்ட மாட்டார்கள். 

சந்நியாசிக் கரடு என்பது சேந்தமங்கலத்தில், சந்நியாசிகள் கூடும் ஒரு குன்று. இதன் முகப்புப் பகுதியில் உள்ள குகை ஒன்றுக்குள் சென்று தொடர்ந்து ஆறு மாதங்கள் நிரிவிகல்ப சமாதியில் (உள்ளுக்குள்ளும் வெளியேயும் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது. தன் மேல் ஒரு பாம்பு ஊர்ந்தால் கூட உணர்வுகள் இருக்காது இதையே பரப்பிரம்ம நிலை என்று கூறுவார்கள்) இருக்கத் தீர்மானித்தார். குகைக்குள் தன்னை வைத்துப் பூட்டுமாறு சிஷ்யர்களிடம் சொன்னார். குருவின் வாக்கை மீறாத சிஷ்யர்கள், குகையைப் பூட்டிவிட்டு, வாயிலியே குருவின் நாமத்தை உச்சரித்தபடி தங்கினர்.
-

ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதியில் இருப்பதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள், சந்நியாசிக் கரடை அடைந்து குகை வாசலில் நின்று அவரை தரிசித்துச் சென்றனர். அப்போது சேலத்தில் இருந்த டெபுடி கலெக்டர் ஒருவர். இந்த விஷயத்தை அறிந்தார். தனி மனிதனை இப்படிப் பூட்டி வைப்பது அவரை சித்ரவதை செய்வதாகும் என்பது அவரது பணிக்கு எட்டிய அறிவு. எனவே, பதறியபடி ஊழியர்களுடன் ஜீப்பில் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தார். சிஷ்யர்களிடம் பூட்டைத் திறக்கச் சொன்னார். குருவின் உத்தரவுக்கு முன் அதிகாரியின் அதட்டல் எம்மாத்திரம்! குருவை இந்த நிலையில் தொந்தரவு செய்யக்கூடாது. அந்த பாவச் செயலை செய்ய மாட்டோம் என்று சிஷ்யர்கள் மறுத்துவிட்டனர்.
-
பார்த்தார் டெபுடி கலெக்டர். தனது சிப்பந்தியை அதிகாரமாக அழைத்து பூட்டை உடனே உடைத்தெறி என்றார். கட்டளைக்குப் பணிந்து அவரும் அதை உடைத்தெறிந்தார். உள்ளே, கிழக்கே தலையும் மேற்கே காலுமாகத் தரையில் படுத்திருந்தார் ஸ்வயம்பிரகாசர். அவருக்கு அப்போது உலகப் பிரக்ஞை இல்லை. உடல் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார். இந்தக் காட்சியைக் கண்டதும் சீடர்கள், குருவே.....! என்று கண்ணீர் விட்டுப் புலம்பினர். ஸ்வாமிகளின் உடலில் உயிர் இல்லை என்பதை சில வினாடிகளில் தீர்மானித்த டெபுடி கலெக்டர். அதே சிப்பந்தியை அழைத்து, உடலை வெளியே எடுத்துவரச் சொன்னார். சிப்பந்தியும் அவ்வாறே செய்தார். இது நடந்து ஒரு சில வினாடிகள்தான் ஆகி இருக்கும். தூக்கத்தில் இருந்து எழுபவர் போல சமாதி கலைந்து சட்டென எழுந்தார் ஸ்வயம்பிரகாசர். அவரது உடலிலும் செயலிலும் எந்த ஒரு தளர்வும் இல்லை. முன்பு இருந்தைவிட மிகுந்த பிரகாசமாகக் காணப்பட்டார்.
-
இதைக்கண்டு பிரமிப்படைந்த டெபுடி கலெக்டர். ஸ்வாமிகளின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி, தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். அவரது உடல் பதறியது. 
-
இதே நிர்விகல்ப சமாதி காலத்தில், ஸ்வாமிகளைப் பற்றி இன்னொரு விஷயமும் சொல்வார்கள் பூட்டிய குகைக்குள் இருந்த அதே நேரத்தில் மலைக் காடுகளில் அவர் சுற்றித் திரிந்ததையும் பலர் கண்டிருக்கிறார்கள்! ஸ்வயம்பிரகாசர் சேந்தமங்கலம் வந்து சேர்ந்த புதிதில், அங்குள்ள குகையில் நிஷ்டையில் இருந்த நேரங்களில் நிர்விகல்ப சமாதி கைகூடியது. அப்போது எவரும் அவரைப் பார்க்க வரமாட்டார்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு பெரிய கருநாகமும் அவருடன் இருக்குமாம். அடியார்கள் எவரேனும் அந்த நேரத்தில் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தால், ஸ்வாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி பாம்பு அகன்று விடுமாம். 
-
அவதூதர் என்பதால், பிறர் கண்களில் அதிகம் படக்கூடாது என்பதற்காக ஸ்வயம்பிரகாசர் குகையில் வசித்து வந்தார். அந்த குகை (குகாலயம்) இன்றும் நம் தரிசனத்துக்கு இருக்கிறது. இந்தியா முழுவதும் எங்கெங்கேயோ சுற்றித் திரிந்த அந்த மகான், இறுதிக் காலத்தில் அந்த குகையிலேயே சமாதி ஆனார். 1948 டிசம்பர் மாதம் தனது 71 வது வயதில் மகா சமாதி அடைந்தார் .

ஆட்கொண்டாா் சாமிகள் :-

தமிழகம் ஈன்றெடுத்த தவயோகிகளில் மிக முக்கியமாணவா் ஆட்கொண்டாா் சாமிகளின் சமாதி நிலை பராமரிப்பு இள்றி, சரியான வழிப்பாடு நடைபெறாமல் இருக்கிறது. ஆட்கொண்டாா் சாமிகள் சமாதிக் கோயில். சுவாமிகள் திருவையாற்றுக்கு திருநெல்வேலியிலிருந்து வந்தவா். திருவையாற்றில் தண்டபானி கோயில் ஏதிரே உள்ள மயில் மண்டபத்தில் அமா்ந்திருப்பாா். யாருயிடமும் பேச மாட்டாா். யாராவது வேண்டுதலைக் கூறிச் "சென்றால் போதும் குறை தீரும்,, 

மக்கள் இவரை ஆட்கொண்டாா் சாமி என்றும், ஆட்கொண்டாா் பிரமம் என்றும், அழைத்தனா்.மயில் மண்டபத்தில் ஆட்கொண்டாா் சாமிகளுடன் அமா்ந்து.மாக்கான் சாமிகள் .அவரது தமக்கையாா் காமாட்சி அம்மையாா்.சுடுகாட்டுச்சாமி ,நொண்டி குருநாதப்பிள்ளை, மற்றோரு குருநாதப்பிள்ளை ஆகிய ஐவரும் ஆன்மீக உரையாற்றுவாா். சுவாமிகள் அவதூத மகான். ஆட்கொண்டாா் சாமிகளும். திருவாரூா் மடபுரம் அவதூத மகான் தெட்சிணாமூா்த்தி சுவாமிகளும் சம காலத்தில் வாழ்ந்தவாா்கள், தெட்சிணாமூா்த்தி சுவாமிகள் தம்மிடம் வரும் அன்பா்களிடம் திருவையாற்றுவனிடம் போ என்றும், ஆட்கொண்டாா் சாமிகள் திருவாரூரானிடம் போ என்றும் கூறுவாா்களாம். இருவரும் ஒரே மாதம் ஆவணி உத்திர நட்சத்திரத்தில் சமாதி அடைந்தாா்கள். இருவரும் குருபூஜையும் ஒரே நாளில் நடைபெறும். ஆட்கொண்டாா் சாமிகள் முக்தி அடையும் கால நேரத்தை முன்னதாகவே மக்களுக்கு அறிவித்து பகல் 12 மணிக்கு அமா்ந்து நிட்டை கூடினாா்கள்.அப்போது மண்டை வெடித்து சபால மோட்சம் அடைந்தாா்கள் சமாதியான ஆண்டு கி. பி.1835.
 சமாதி அமைந்துள்ள இடம்: தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு கல்கி அக்ரஹாரம் என்ற இடத்தில் மெயின்ரோட்டில் சமாதிக்கோயில் உள்ளது. (தகவல் சித்தர் தேசம் - 9600071277)

யாழ்ப்பாண எனி ஜீவசமாதி -திருப்புறம்பியம்..!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் யாழ்ப்பாண ஆறுமுகசாமி என்ற சித்தரின் ஜீவசமாதி உள்ளது. சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை .. பல்வேறு அருளாடல்கள் புரிந்து மக்களின் குறைகளை போக்கி அருள் புரிந்துள்ளார்.. இந்த சமாதியில் மாதந்தோறும் பவுர்ணமியன்று மாலை நேரத்தில் சிவலிங்கத்திற்கு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தினமும் காலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அருகில் பாம்பு ஒன்று காவல்காத்து வருவதாகவும் சிவலிங்கத்தின் மீது சட்டை உரித்து செல்லும் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.. கும்பகோணம் to ஜெயகொண்டம் செல்லும் வழியில் கச்சம்பட்டி என்ற இடத்தில் சமாதி ஆலயம் உள்ளது..

 THIRUANNAMALAI  SIDDHARS :


1.குகை நமசிவாயர்,2. விருப்பாச்சி தேவர்,
3.சேஷாத்ரி சாமி,4. அன்னை உமாதேவி,
5.சடைச்சி அம்மாள், 6.பத்ராசல சாமிகள், 7.சடைச்சாமிகள், 8.கண்ணாடி சாமி,
9.அண்ணாமலை சாமி , 10.ரமணர்,  11.அன்னை அழகம்மை (ரமணர் தாயார்),
12.பொடிசித்தர்(வா), 13.ஸ்ரீநிரஞ்சானந்தா சாமி, 14.ஸ்ரீராமானந்தா சாமி,1 5.ஸ்ரீமுருகனார் 16.ராஜேஸ்வரானந்தா சாமி, 17.ஸ்ரீ விஸ்வநாத சாமி, 18.ஸ்ரீராமசாமி பிள்ளை, 19.ஸ்ரீகுஞ்சு சாமி, 20.சாது ஓம் சாமி,  21.திண்ணை சாமி, 22,யோகி ராம் சுரத்குமார்,  23. விபூதி சித்தர்(வா),


24.கொட்டாங்குச்சி சித்தர்25.அடிமுடி சித்தர், 26.ஸ்ரீவேங்கடராம்27.இசக்கி சித்தர், 28.அம்மணி அம்மாள்,  29. ஈசான ஞான தேசிகர், 30.அழகானந்த ஞான தேசிகர், 31. அங்கபிரதஸ்சன அண்ணாமலை சாமி, 32.திருநாவுக்கரசு சாமி,  33.கைதட்டி சித்தர், 34.மவுனயோக விடோபானந்தா, 35.பர்வதசாமி, 36.ஸ்ரீமத் பெரியசாமி, 37.பூண்டி மகான் ஆற்றுசாமி, 38.மலையாள சாமி, 39.சின்னத்தம்பி சாமி, 40.சபாபதி சாமி,  41,மாணிக்க சின்னசாமி, 42.வெட்டவெளி சித்தர் 43.விடோபா சாமி, 44.துரைசாமிகள்,  45.அருள் யோகானந்த சாமீ, 46.பிரம்ம ஞானி சந்நியாசி அப்பன்,  47.தேவகிரி சித்தர், 48.துர்காபிரசாத் சாமிகள் 49.பரதேசி ஆறுமுகசாமி, 50.இரைசித்தர்,  51.பழனி சாமிகள், 52.வெள்ளையானந்தா 53.நாராயண தேசிகர்,  54.சற்குரு ஞானதேசிகர், 55.சிதம்பரம் சட்டி சாமியார்


சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகிலுள்ள ஊர் வேம்பத்துார். இங்கு வந்த மகான் ஒருவர் சிறுவன் ஒருவனிடம் ''தம்பி... தினமும் நான் உபதேசித்த சக்தி மந்திரத்தை ஜபித்தவர்! அம்பிகையருளால் நலம் உண்டாகும்'' என வாழ்த்திச் சென்றார். சிறுவனும் அப்படியே செய்ய ஜபத்தின் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டியது. அம்பிகையின் அருளுக்கு பாத்திரமானான் சிறுவன். அவன் வாய் திறந்தாலே கவிமழை பொழிந்தான். 'கவிராஜ பண்டிதர்' என அச்சிறுவன் புகழ் பெற்றான். இனி நாமும் 'கவிராயர்' என்றே குறிப்பிடுவோம். 

கவிராயருக்கு திருமணம் நடந்தது. அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த கவிராயரின் மனைவி, 'நான் வந்த வேலை முடிந்தது' என்பது போல உடனே காலமானாள். 'பராசக்தி! உன் திருவுள்ளப்படி உலகில் எல்லாம் நடக்கிறது'' என்று அம்பிகையை சரணடைந்தார். தாயில்லாக்குறை போக்க தானே தாயாக இருந்து மகளை வளர்த்தார். இந்நிலையில் கவிராயர் ஆதிசங்கரரின் 'சவுந்தர்ய லஹரி' என்னும் ஸ்தோத்திரத்தை தமிழில் பாடினார். அதில் சில தவறுகள் இருக்கவே, சாதாரணப் பெண்ணாக வந்த அம்பிகை. ''கவிராயரே... இப்படி தவறாக பாடலாமா'' எனக் கேட்டாள். அவரோ, ''என் வாக்கில் எழுந்ததையே நான் பாடினேன்'' என்றார். உடனே அப்பெண் ''உன் நாவிற்கு கவிபாடும் ஆற்றல் இல்லாமல் போகட்டும்'' என்றாள். பதறிய கவிராயர் அவளிடம் மன்னிப்பு கேட்க, அம்பிகை சுயரூபம் காட்டி பாடும் ஆற்றலை வழங்கி கைலாயம் சென்றாள். 

அங்கு சிவன் ''தேவி... உன் பக்தன் கவிராயனுக்கு முதலில் ஏன் தண்டனை கொடுத்தாய்? அதற்கு பரிகாரமாக பூலோகம் சென்று ஆறுமாத காலம் அவனுடன் இரு. உன் கையாலேயே உணவு சமைத்துக் கொடு'' என்றார். அம்பிகையும் அதை மறுக்கவில்லை. 

நாட்கள் சில கடந்தன. ஒருநாள் கவிராயர் காசிக்குச் செல்லத் தீர்மானித்தவராக தன் மகளைத் தங்கையின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். '' நான் காசியாத்திரை செல்கிறேன். அதுவரை என் மகளை பாதுகாத்து வா'' என்று தங்கையிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினார்.  ஊர் எல்லையைக் கடந்ததும் ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாறினார். அப்போது ''அப்பா'' எனக் குரல் கொடுத்தபடி கவிராயரின் மகள் ஓடி வந்தாள். அவளது கைகளில் சில சமையல் பாத்திரங்கள், சமைக்கத் தேவையான பலசரக்குகள் இருந்தன.

''என்னம்மா இது?'' என வியப்புடன் கேட்டார் கவிராயர். 

''அப்பா... நானும் காசியாத்திரை வர விரும்புகிறேன். உங்களுக்கு உதவியாக சமைத்தும் கொடுப்பேன்'' என்றாள். மகளின் அன்பு கண்டு மனம் நெகிழ்ந்தார் கவிராயர். செல்லும் வழியெல்லாம் மகள் உணவு சமைத்தாள். காசிக்குச் சென்ற அவர்கள் கங்கையில் புனித நீராடி, விஸ்வநாதர், விசாலாட்சியை தரிசித்தனர். 

கோயிலுக்கு அருகிலுள்ள வளையல் கடையை கண்ட மகள் ''அப்பா! எனக்கு கண்ணாடி வளையல் வேண்டும்'' எனக் கேட்டாள். காசு ஏதுமில்லாத கவிராயர் திகைத்தார். அருகில் நின்ற பக்தர் ஒருவர் விஷயம் புரிந்தவராக தமிழில் ''குழந்தை வளையல் கேட்கிறதே என யோசிக்க வேண்டாம். நான் வாங்கித் தருகிறேன்'' என்று காசு கொடுத்ததோடு, வளையல்கள் கையில் அணிவித்து விட்டு நகர்ந்தார்.

சிலநாள் காசியில் தங்கிய கவிராயர் மகளுடன் ஊருக்குப் புறப்பட்டார். வழிநெடுக மகள் உணவு சமைத்துக் கொடுக்க எளிதாகப் பயணம் முடிந்தது. ஊர் எல்லையை அடைந்ததும் கவிராயர் ஒரு மரத்தடியில் சற்று ஓய்வெடுக்க விரும்பினார். அப்போது''அப்பா... நான் வீட்டுக்குச் செல்கிறேன். நீங்கள் மெதுவாக வந்து சேருங்கள்'' என்று சொல்லி நடந்தாள் மகள்.

இந்நிலையில் கவிராயரின் தங்கையின் வீட்டுக்கு ஒரு பெண் வந்தாள். ''அம்மா! உன் அண்ணனான கவிராயர் ஊர் எல்லைக்கு வந்து விட்டார். தன் மகளுக்காக கண்ணாடி வளையல்களை காசியில் வாங்கியதாக சொல்லி என்னிடம் கொடுத்தார்'' என்று சொல்லி அதை கொடுத்து விட்டுப் போனாள். அவளிடம் என்ன ஏது என்று விஷயம் கேட்பதற்குள் அங்கிருந்து சென்று விட்டாள். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கவிராயரிடம், தங்கை நடந்த விபரத்தை சொல்லி வளையல்களை காட்டினாள்.

தன் கண்களையே கவிராயரால் நம்ப முடியவில்லை. காசியில் வாங்கிய கண்ணாடி வளையல்களாக அவை இருந்தன. கவிராயர் தன் தங்கையிடம் காசியில் நடந்ததை ஒன்று விடாமல் எடுத்துச் சொன்னார். இந்நிலையில் தங்கை '' அண்ணா...நீ காசி கிளம்பியது முதல் உன் மகள் அழாத நாளில்லை. ஆறுதலாக நாலு வார்த்தையாவது அவளிடம் பேசு'' என்றாள்.

ஏதும் புரியாமல் கவிராயர் வீட்டுக்குள் ஓடினார். தந்தையின் வரவைக் கண்ட மகள் புத்துணர்ச்சியுடன் எழுந்தாள். மகளின் வடிவத்தில் வந்த அம்பிகை தனக்காக உணவு சமைத்ததை உணர்ந்த கவிராயருக்கு கண்ணீர் பெருகியது. இதையறிந்த குடும்பத்தினரும் மனம் நெகிழ்ந்தனர். கவிராயர் அம்பிகையின் மீது தமிழில் பாடிய சவுந்தர்ய லஹரி, வராகி மாலை என்னும் நுால்கள் இன்றும் கிடைக்கின்றன. அவருக்கு அருளிய அம்பிகையின் திருவடிகளை நாமும் சரணடைந்து நல்லருள் பெறுவோம்.


சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் 
( 58  சித்தர்கள் ஜீவசமாதி ):
1.மறை ஞானசம்பந்தர், 2.சுந்தர சாமிகள்,
3.அவதூதர் சாமிகள், 4.குருநமசிவாயர்,
5.மாணிக்கவாசகர் கோவில்,
6.மௌன குருசாமி,7.வஸ்வலிங்க சாமி,
8.செல்லப்ப சாமி,
9.ஆறுமுகசாமி, 10.பொன்னம்பல சாமி,
11.காசிவாசி சாமி,12.சபாபதி சாமி,13.சகஜானந்தா,
14.ஸ்ரீலஸ்ரீசிவா சாமி, 15.உமாபதிசிவம்,
16.ஹஜ்ரத் சையது பாத்திமாபீவி,
17.கிரியாபாபாஜி, 18.சையது-நா-உக்காஷா, 19.ராமநாதசாமி,
20.கிருஷ்ணசாமி,

21.சின்னையன்(முருகனடியார்)
22.சையது ஷா ரஹமதுல்லா,
23.வெள்ளியம்பல சாமிகள்,
24.ராகவேந்திரர் பிறந்த இடம்,
25.தில்லை வாத்தியார் சாமி,26.பெல்லாரிசாமி(எ)பசுபதி சித்தர்,
27.வள்ளலார் பிறந்த இடம்,
28.பட்சி சாமிகள், 29,தத்துவராயர்,
30.வாய்மூடி சித்தர், 31.சின்னசாமி, 32.திகம்பரசாமிகள்,33.நாரரயணசாமி தேசிகர்,
34.பரப்பிரம்ம யோகஞான சாமிகள், 35.தொட்டாசாரியார்,
36.குமாரதேவர், 37.சிதம்பரம் சாமிகள்,
38.கோரக்கர் சித்தர், 39.தாத்தா சாமிகள்,
40.சிவபழனி ஞானி, 41.நிர்வாண முத்துக்குமாரசாமி, 
42.அகப்பேய் சித்தர்,43.சித்திவளாக மாளிகை,
44.தீஞ்சுவை. நீரோடை, 45.எலுமிச்சை ராமசாமி,
46,முருகானந்த சாமி, 47.மௌனகுருசாமி,
48,கல்பட்டு ஐயா, 49.சுப்புராய பரதேசி,
50. நெல்லூர் ஐயா, 51.கொண்டா ரெட்டியார் ,52.சுப்புராய சாமி, 53.அப்பா சாமி,
54.கோலா சாமிகள், 55.சோலை சிவயோக சாமிகள், 56.விருப்பக்கம்மாள்,
57.சத்திய ஞானசபை ஜோதிதரிசனம்,
58.வள்ளலார் நீரால் விளக்கேற்றிய இடம்(கருங்குழி)


தெய்வத் திருமகன் -குழந்தையானந்தா சுவாமிகள் தரிசனம் : >> மதுரையை அடுத்த சமயநல்லூரில் 1627ல் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் திரிபுரசுந்தரி தம்பதியினர். இவர்கள் ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற் கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. >> திரிபுர சுந்தரி மதுரைக்கு வந்து மீனாட்சி அன்னையிடம் மனமுருகி வேண்டினார் .. தாயே ..! எங்களுக்கு குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். வேண்டுதலின் பலனாக ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள் அன்னை . பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். இளைய குழந்தையை தாங்கள் வளர்த்தனர். >> அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது...தாயாக, தந்தையாக, குருவாக இருந்து அன்னை மீனாட்சிதான் வளர்த்தாள் என்றே சொல்லலாம் .. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என்றே பக்தர்கள் அழைத்தனர். >> ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். >> புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார். >> ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுகிறார் .இம்மகான் 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது .. 

இவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும். >> இம்மகான் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். >> இவர் ஒரு சமயம் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார். >> மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

>> திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். >> 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். >> 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். 

அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள். >> மதுரை காளவாசல் அருகே உள்ள இவரது சமாதி கோவிலில் அமர்ந்து தவம் செய்தோம் ..அருமையாக இருந்தது .

வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே உள்ள அக்கிரகாரத்தில் இவரது கோவில் உள்ளது ஒருமுறை சென்று வாருங்கள் .இவரின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் ஆவார் ..இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார்.. ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுகிறார் .இம்மகான் 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது .. . https://www.facebook.com/rammy.sithargal/

No comments:

Post a Comment