எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, September 17, 2018

கிராத மூர்த்தி

கிராதன் என்ற சொல்லிற்கு வேடன் எனப் பொருள். ஈசன் வேடனாகக் காட்சி அளித்த கோலத்தையே கிராத மூர்த்தி அல்லது திருவேடீசர் என்கின்றனர். இது மஹாபாரதக் கதையுடன் தொடர்பு கொண்டது.
பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசமும் முடிந்தாலும் கெளரவர்களுக்குப் பாண்டவர்களின் உரிமையைத் திரும்பக் கொடுக்க மனம் வரவில்லை. கண்டிப்பாய் மறுத்தனர். துரியோதனனின் இந்தப் பிடிவாதத்தால் தவிர்க்க இயலாது போர் உருவாகும் என்பதைப் பாண்டவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா எடுத்துச் சொன்னார். ஆகவே போருக்குத் தயாராகும்படி அறிவுறுத்தினார். முக்கியமாய் வில்லில் சிறந்த அர்ஜுனனை சர்வ வல்லமை பெற்ற சர்வேசுவரனிடமிருந்து இன்னும் அதிக வல்லமை பெற்று வர அறிவுறுத்தினார். ஈசனின் பாசுபத அஸ்திரத்தைத் தவம் இருந்து பெற்று வர வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.
பாசுபத அஸ்திரத்தை ஈசனிடமிருந்து பெற்று வரும் வழிகளையும் விளக்கிக் கூறினார். அதன்படி திருக்கைலையில் இந்திரநீல பர்வதத்தின் சாரலில் அர்ஜுனன் நான்கு பக்கமும் அக்னியை மூட்டி ஆகாயத்தின் சூரியனை ஐந்தாவது அக்னியாக மனதில் வரித்துக் கொண்டு, கடும் தவம் செய்தான். பஞ்ச அக்னியின் நடுவே அவன் செய்த தவத்தால் ஏற்பட்ட உக்கிரம் அதிகமாக, அதிகமாக அர்ஜுனனிடமிருந்து ஜ்வாலைகள் வெளிப்பட்டன. ரிஷி, முனிவர்களால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.
ஈசனிடம் சென்று அர்ஜுனனின் தவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஈசனுக்குத் தெரியாதா? எனினும் அர்ஜுனனுக்கு அவ்வளவு எளிதில் பாசுபத அஸ்திரத்தைக் கொடுக்க முடியுமா? அவனைச் சோதனை செய்ய எண்ணினார் சர்வேசன். ஆகவே வில்லையும், அம்புகளையும் ஏந்தி ஒரு வேடனாக மாறினார். அப்போது சிவபெருமான் வேடராகவும், பார்வதி தேவி வேடுவச்சியாகவும், முருகன் குழந்தையாகவும், வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும், தேவகணங்கள் வேட்டுவக் கூட்டமாகவும் மாறியது. இந்திர நீல பர்வதச் சாரலில் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு காட்டுப் பன்றி ஒன்று அர்ஜுனன் மேல் பாயத் தயாராக ஓடோடி வந்தது.
பன்றி வேறு யாருமல்ல; மூகாசுரன் என்னும் அசுரன். அர்ஜுனனை எவ்வாறேனும் கொன்றுவிட்டால் பாண்டவர்களின் பலத்தை ஒடுக்கலாம் என எண்ணிப் பன்றி வடிவெடுத்துக் கொல்ல வந்தான். காட்டுப் பன்றியின் ஹூங்காரத்தால் தவம் கலைந்த அர்ஜுனன் கண் விழித்தான்; பன்றியின் மீது ஓர் அம்பைத் தொடுத்தான்.
அதே கணம் அங்கே வந்த ஈசனும் தன் வில்லில் இருந்து ஒரு பாணத்தைத் தொடுக்க, பன்றி இறந்து விழுந்தது. அதன் உடலில் இரு அம்புகள் இருப்பதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு. நிமிர்ந்து பார்த்தபோது வேட்டுவச்சி ஒருவளோடு ஒரு வேடன் நிற்பதைக் கண்டான்.
“நீ யாரப்பா வேடா? நான் அம்பெய்து வீழ்த்திய பன்றியை நீயும் ஏன் மீண்டும் இரண்டாம் முறையாக அம்பெய்து வீழ்த்தினாய்?” அர்ஜுனன் கேட்டான் வேடுவனாகிய ஈசனிடம்.
ஈசன், “ஆஹா, இது என்ன புதுக் கதை! நான் யாராய் இருந்தால் உனக்கென்னப்பா? நீ இங்கே இந்த நடுக்காட்டில் என்ன செய்கிறாய்? தவம் செய்கிறாயா?? தவம் செய்பவனுக்கு வேட்டை எதற்கு? இந்தப் பன்றி என் அம்பால் விழுந்தது. இது எனக்கே சொந்தம்; உனக்கல்ல. நீ பாட்டுக்குத் தவம் செய்ய மீண்டும் செல்வாய்!” என்றார் ஈசன்.
கோபம் கொண்ட அர்ஜுனன், வேடனாகிய ஈசனைப் பார்த்து, இந்தப் பன்றியைத் தன்னுடைய வில்லில் இருந்து கிளம்பிய அம்பே கொன்றதாகவும், ஆகவே பன்றி தனக்குத் தான் சொந்தம் எனவும் கூறிவிட்டுக் குனிந்து செத்த பன்றியைத் தூக்க முனைந்தான். வேடுவன் அவனைத் தன் காலால் தடுத்தான்.
அதைக் கண்டு திகைப்புற்ற அர்ஜுனன் நிமிர்ந்து பார்க்க வேடன், “வா, நாம் இருவரும் போர் புரிவோம். உன்னால் இயன்றால் உன் பாணங்களால் என்னை அடித்துப் போட்டுவிட்டுப் பின்னர் அந்தப் பன்றியை எடுத்துச் செல்வாய்!” என்று கூறிய வண்ணம் போருக்கு ஆயத்தமானார். கோபம் கொண்ட அர்ஜுனனும் போருக்குத் தயாரானான். அந்த வேடன் மீது அம்பு மழை பொழிந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அர்ஜுனனின் அம்புகளோ, அஸ்திரங்களோ அந்த வேடனைப்பாதிக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் தனது காண்டீபத்தையே தூக்கி அதனால் வேடனை அடிக்க முனைந்தான் அர்ஜுனன். அர்ச்சுனனின் வில்லின் நாணை சிவபெருமான் அறுத்தார். பதிலுக்கு வில்லால் சிவனை அடித்தான் அர்ச்சுனன். அவ்வடி உலகஉயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது.ஆனால் அந்த வேடனோ காண்டீபத்தைப் பறித்துக் கொன்டு அர்ஜுனனோடு மல்யுத்தம் செய்து அவனை அப்படியே மேலே தூக்கிக் கீழே அடிக்க, அர்ஜுனன் மூர்ச்சை அடைந்து விழுந்தான்.
சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த அர்ஜுனன் தன்னருகே ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். உடனே பக்தியுடன் எழுந்து அதை வணங்கிக் காட்டுப் பூக்களைக் கொண்டு ஒரு மாலை கட்டி சிவலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டான். பின்னர் அவனுக்குத் தான் கீழே விழுமுன்னர் நடந்தவை நினைவில் வர வேடனைத் தேடிக் கண்டு பிடித்தான். வேடன் போகும்போது காண்டீபத்தை வேறு கொண்டு போய்விட்டான். ஆகவே வேடனைக் கண்டதும் மீண்டும் போருக்கு ஆயத்தமான அர்ஜுனனுக்கு என்ன ஆச்சரியம்! சிவலிங்கத்தின் தலையில் தான் சாற்றிய மாலையை இந்த வேடன் தன் தலையில் அணிந்து கொண்டிருக்கிறானே.
பதறிய அர்ஜுனன் ஓடோடியும் வந்து லிங்கம் இருந்த இடத்தைப் பார்த்தான். லிங்கத்தின் தலையில் அவன் சாற்றி வழிபட்ட மாலை அப்படியே இருந்தது. மீண்டும் ஓடிப் போய்ப் பார்த்தால் வேடன் தலையிலும் அதே. உண்மை விளங்க வேடன் காலடியில் விழுந்து வணங்கினான் அர்ஜுனன்.
மல்யுத்தம் செய்கையில் தழுவிக் கொண்டு சண்டை போட்ட அர்ஜுனனை இப்போது ஈசன் பாசத்தோடும், பரிவோடும் ஆரத் தழுவினார். அவனை மனமார ஆசீர்வதித்து, அவன் வீரத்தைப் பாராட்டி, சக்தி வாய்ந்த, ‘பிரம்ம சிரஸ்’ எனப்படும் பாசுபத அஸ்திரத்தையும் அவனுக்கு அளித்து, அதைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். காண்டீபத்தையும் திரும்ப அளித்தார்.
விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய அவர்கள் பங்கிற்கு இந்திரன், அக்னி, எமன் போன்றவர்களும் அர்ஜுனனுக்கு ஆயுதங்களை அளித்து வாழ்த்த அர்ஜுனன் பெரும்பேறு பெற்றான்.
இது மஹாபாரதக் கதை, ஆரண்ய பர்வத்தில் வரும்.
இந்த பாசுபதம் பெற்ற திருத்தலமாகத் தமிழ்நாட்டின் திருவேட்களம் சொல்லப் படுகிறது. சிதம்பரத்திற்கு அருகேயே அமைந்துள்ளது. ஈசனின் பெயரே பாசுபத நாதர் என்பதாகும். அம்பிகை சகல நற்குணங்களையும் கொண்டு சற்குணாம்பிகை என அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் இந்தத் தல புராணத்தை விளக்கும் சிற்பங்களைக் காணலாம் .
பாசுபத நாதர் இடக்கையில் வில்லை ஏந்தியும், வலக்கையில் அம்பை ஏந்தியும், ஜடாமகுடம் தரித்து, கழுத்தில் வேடுவர்களுக்கே உரிய கொம்பு மாலையுடனும், காலில் வீரக் கழலுடனும் காட்சி அளிக்கிறார் .


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள மல்லிநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டு பழமையானது. more info images of this temple and many more temples @ :- https://veludharan.blogspot.com/2018/03/sri-mallinathar-jeenalayam-perumbugai.html


பாக்கூர் கிராமத்தில் ஊருக்கு வெளியில் குளக்கரையில் வெட்ட வெள்ளியில் பூமியில் பாதி புதைந்த நிலையில் தரிசனம் கொடுக்கிறார் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்ற நாமத்தோடு கூடிய ஈசன். அருகில் உள்ள நந்தி சிலையும் பாதி பூமியில் புதைந்த நிலயில் உள்ளது. அருகே மரத்தடியில் நின்ற கோலத்தில் உள்ள விநாயகர் சிலை காணப்படுகிறது. கோயில் எல்லாம் போய்விட்டது. ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு உதயகுமார்-8940648190, திரு பாண்டியன்-9751087258, திரு ராஜேந்திரன்-9894935094.. இக்கிராமம் செய்யூர்- மதுராந்தகம் சாலையில் 7 கி. மி. தொலைவில் உள்ளது. செய்யூரிலிருந்து ஷேர் ஆட்டோ போகிறது - அகத்தியர் ஞானம் .

பசுபதீஸ்வரர் ,கோணமங்களம்
 திருவண்ணாமலை மாவட்டம் கோணமங்களம் கிராமத்தில் பல ஆயிரமாண்டுகளாக பழைமையோடு விளங்கி கொண்டிருக்கிற லிங்கத்தை அந்த பகுதி மக்களின் வேண்டு கோளுக்கிணங்க அதனை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் பின்னணியாக ஆதியில் அந்த லிங்கத்தை சுதாங்கி என்ற பசுவானது தன் பாவம் தீர்க்க இந்த லிங்கத்தை வழிபட்டதாகவும் இந்த லிங்கம் பசுபதீஸ்வரர் என்ற பெயரோடு வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது , மேலும் கோணமங்களம் என்னும் ஊர் ஆதி காலத்தில் கோவூர் மங்களம் என்ற பெயரில் பல ஆயிரக்கனக் காண பசுக்கள் இருந்ததாக அறியப்படுகிறது, சோழ மன்னன் ஆதித்தியனின் படைத் தளபதி வளர்சடைபுறந்தன் என்னும் தளபதியால் இந்த லிங்கம் வணங்கப்பட்டதாக அறிய முடிகிறது . 

மதுரநாதீஸ்வரர்
பக்தியோடு உள்ளே நுழைந்தால் இடதுபுறம் சுயம்பு மாணிக்க விநாயகர் சன்னிதி உள்ளது. அடுத்து நடுநாயகமாக லிங்கத் திருமேனியாக விளங்கும் மதுரநாதீஸ்வரர் சன்னிதியும், வலப்புறம் வள்ளி-தெய்வானையோடு பாலசுப்பிரமணியர் சன்னிதியும் இருக்கின்றன.

இந்த சன்னிதி விமானங்கள் மூன்றும் சோழர் கால பாணியில் கட்டப்பட்டு, சுதை சிற்பங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன, நவக்கிரக தோஷங்கள் விலகும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ,மகாலட்சுமி, மரகதாம்பிகை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, நவக்கிரக சன்னிதி, யாகசாலை, இறுதியாக சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சிதரும் கால பைரவர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் தலவிருட்சமான வில்வ மரம் பிரமாண்டமாக பரந்து நிற்கிறது. தீர்த்தம் தீர்த்த குளமாக உள்ளது.ஆலயத்தின் பிரதான தெய்வமாக சுயம்பு மாணிக்க விநாயகர் விளங்கு கிறார்.
உளி படாமல் உருவான இந்த நாயகனை பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரையும், கால பைரவரையும் ஒரு சேர வணங்கினால் நவக் கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அமைவிடம் திருவண்ணா மலையிலிருந்து காஞ்சி, காரப்பட்டு செல்லும் சாலையில் பெரியகுளத்தில் இருந்து வடமாத்தூர் 3 கி.மி தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலை செங்கம் சாலையில் கண்ணக்குறிக்கையில் இருந்து 7-வது கி.மி தூரத்தில் உள்ளது.

No comments:

Post a Comment