எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 28, 2020

அகத்தியெம்பிரானின் அருளுரைகள் – 1


இறையிடமும், எம்மிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலெல்லாம் அறிவை பயன்படுத்தாத மனிதன், எம்மிடம் வரும்பொழுது மட்டும்தான் ஏன் ? எதற்கு ? எப்படி ? இதை எப்படி ஏற்பது ? இதற்கும், நடைமுறைக்கும் முரணாக இருக்கிறதே ? இப்படியெல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே ? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்திபோல் சிந்திக்கிறான். இல்லையில்லை, அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.

இறைவன் அருளால், இதைப் போல காஞ்சியிலே கைலாசநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கே தவழ்ந்து வந்தால் ஒரு பிறவி போய்விடும் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொரு ஆலயத்திலே ஸ்தல விருக்ஷம் இருக்கிறது. அதனை சுற்றி வந்தால் பல பிறவிகள் போய்விடுகிறது என்று கூறுகிறார்கள். இன்னொரு ஆலயத்திற்கு ஒரு முறை சென்று இறை நாமத்தை ஒரு முறை ஜெபித்தாலே கோடி முறை ஜபித்த பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் இறைவனின் பெருமையை பறைசாற்றுவதற்காக மனிதர்களால் கூறப்பட்டது. பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்துவிட்டு நீ கூறிய இடுக்கின் வழியாக ஒருவன் வெளியே வந்தால் அவனுக்கென்ன முக்தி கிடைக்குமா ? மோக்ஷம் கிடைக்குமா ? ( முதலில் ) ஒருவனின் நடைமுறை வாழ்க்கையிலே சாத்வீகமும், சத்தியமும், தர்மமும், பக்தியும்தான் இருக்க வேண்டும். மற்ற புற சடங்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.


இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு, தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இஃதொப்ப நிலையிலே முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு, வேறு நிலைதான். 3000 ஆண்டுகள் என்பதை மனிதரீதியாக பார்க்கக்கூடாது. அது தேவ ஆண்டுகளைவிட மிக அதிக கணக்கு. எனவே சூட்சுமமான நிலையில் அன்னவன் ( திருமூலன் ) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்துகொள்வது என்பது மிக கடினம். அதுமட்டுமல்ல. இதுபோன்ற ஞான நிலையை அடைந்த, சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால், ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளே மெய்ப்பொருளாகும்.

வாசி யோகம் பற்றி :

இறைவனின் அருளைக்கொண்டு, யோகம் என்பது மனிதர்களால் பல்வேறுவிதமாக கையாளப்படுகிறது. ஒருவன் நல்ல ஆரோக்யமான உடலை பெற்று நல்ல பதவியில் இருந்தால், பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தால்        அவனுக்கென்னப்பா, யோகக்காரன் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் யோகம் என்பதைவிட ஏகம் என்பதே சரியான பொருளாக இருக்கும். ஏகம் என்பது தனித்திருத்தல். தனித்திருத்தல் என்றால் ஏதோ கூட்டங்களை விட்டு ஒதுங்கியிருத்தல் என்று தவறாக எண்ணுகிறார்கள். அப்படியல்ல. உள்ளத்திலிருந்து இந்த உலகைப் பிரித்து தனித்திருத்தல். ஏகமாக இருத்தல். அப்படி ஏகமாக இருக்கும்பொழுதுதான் ஏகனாக இருக்கக்கூடிய அந்த ஏகாம்பரனின் அருள் கிட்டும். அப்படி கிட்டுகின்ற வழிமுறைகளில் ஒன்றுதான் இதுபோன்ற வாசி யோகம், வாசிக் கலை, ப்ராணாயாமம். முதலில் உடலை சரிசெய்யாமல் சுவாசப் பயிற்சியில் சென்றால் தேவையில்லாத பின் விளைவுகள்தான் ஏற்படும். எனவே உடலை நன்றாக, பரிபூரணமாக ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு உடல் ரீதியான சில பயிற்சிகளையெல்லாம் செய்துவிட்டு பிறகு கும்பகம் செய்யாமல், அதாவது மூச்சை உள்ளே நிறுத்தாமல் ஆழ்ந்த சுவாசத்தை அதிகாலையிலே, வாய் வழியாக இல்லாமல், நாசி வழியாக மட்டும் விட பழகிக்கொண்டே வந்தால் பிறகு இன்னவன் கூறுகின்ற வாசிக் கலையானது காலப்போக்கிலே இறையருளால் யாம் கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றிக்கொண்டே வந்தால் சித்தியாகும். 

ஐயப்பன் கோவில்களில் 18 படிகள் வரக் காரணம் என்ன ? 18 என்ற எண்ணிக்கையின் சிறப்பு பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் பொதுவாக 18 என்பது மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்துப்போய்விடுகிறது. அதனால்தான் 18 சித்தர்கள், மகாபாரதத்திலே 18 தினங்கள் யுத்தம், 18 பர்வதங்கள் என்று ஏற்றுக்கொண்டு விட்டான். இதில் சில இல்லாமல் இல்லை. இன்னவன் கூறிய ஹரிஹரபுத்திரனின் அந்த படிகளின் எண்ணிக்கை பதி எண் கணக்கிலே, அந்த இரண்டையும் கூட்டி நவமாக்கி, அந்த நவம் என்பது மனிதனின் தேகத்திலே இருக்கிறது. இந்த நவத்தை வெல்லவேண்டும் என்பதின் பரிபூரண சூட்சுமம்தான் அங்கே படிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று. விக்கிரமாதித்தனின் ஆசனத்தில்கூட பல்வேறு படிகளும், பதுமைகளும் இருந்தன. படி தேவதைகள் என்று இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை சேர்க்க, சேர்க்க ஒரு படி மனிதன் ஏறுகிறான் என்பது தேவ மொழியாகும். இங்கே படிப்படியாக உயர்வது என்பது உலகியல்ரீதியாக, வெளிப்படையாக பொருளாதார வெற்றியை, பதவியை குறிக்கலாம். ஆனால் தேவ ரீதியில், இறை ரீதியில், மகான்கள் ரீதியில் நேற்றைவிட இன்றைய தினம் எந்தளவு பாவத்தைக் குறைத்திருக்கிறான் ? எந்த அளவு புண்ணியத்தை செய்திருக்கிறான் ? எனவே இறைவனை நோக்கி அடுத்தபடியில் இவனை அமர்த்திவிடலாம் என்பதை படி தேவதைகள் தீர்மானித்து அடுத்த நிலைக்கு தள்ளிவிடும். அந்த நிலையிலேயே இருக்கிறானா ? இன்னும் இறைவன் அருளை நோக்கி அடுத்த படிக்கு செல்கிறானா ? என்பதை பார்த்து அந்த படி தேவதை இன்னொரு படிக்கு தள்ளி விடுகிறது. இறுதியாக படிப்படியாக உயர்ந்து அந்தப் பதியிடம் அந்த ஆத்மா செல்வதைதான் உண்மையான சூட்சுமப் படி குறிக்கிறது. இதை அந்த தெய்வத்திற்கு புறச்சடங்காக 18 படிகள் என்று வைத்திருக்கிறார்கள். எல்லா தெய்வங்களுக்கும் இந்த படி நிலை என்பது உண்டு. இதனால்தான் மலைகளில் ஏராளமான படிகள் வைத்து அந்தப் படிகளில் ஏறி, இறங்கினால் இறையருள் என்று வைத்திருக்கிறார்கள். இறை அருள் என்பது பிறகு. உடல் ஆரோக்கியம் என்பது முதலில். அந்தப் படி தேவதைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு படியின் அடியிலும் பல ரிஷிகளும், மகான்களும் தவம் செய்து கொண்டு இதோ ! என் மேல் ஏறிப் போகிறானே ? இந்த மனிதனின் பாவங்கள் இத்தனை இருக்கிறது. இவன் இத்தனை, இத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறான். இறைவா ! இப்பொழுதுகூட இவன் தன்னை உணராமல் ஏதோ சுற்றுலா போல்தான் இங்கு வந்திருக்கிறான். இவன் அறியாமையை நீக்கிவிடு. வேண்டுமானால் இவன் பாவங்களை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஒவ்வொரு படியின் அடியிலும் அமர்ந்திருக்கும் மகான் ஒவ்வொரு தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். எனவே அந்தப் படி என்பது சாதாரண விஷயமல்ல. படிப்படியாக மேலே செல்வதைக் குறிக்கும். பின்னால் இதனை நீ படிப்படியாக புரிந்துகொள்ளலாம்.

படிப்படியாக பலவற்றை நாங்கள் கூறினாலும், படிப்படி என்று நாங்கள் கூறும்பொழுது அது பல பேருக்கு அந்த படிப்படி என்பது புரியாமல்தான் போய்விடுகிறது. படி, படி என்று குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் கூறுவது குழந்தைகளுக்கு பிடிக்காதது போல நாங்கள் பல படிகளைக் கூறும்பொழுது மனிதர்களுக்கும் படிப்படி என்பது பிடிக்காமல் போய்விடுகிறது. படிப்படியாக பலவற்றை நாங்கள் கூறுகிறோம். அதனை படிப்படியாக பதிவு செய்து படிப்படியாக மேலே ஏறி அந்தப் படியின் உச்சியிலிருக்கும் பதியிடம் அனைவரும் சேர வேண்டும் என்று நல்லாசி கூறி, படிப்படியாக இன்னும் மேலே உயர நாங்கள் அந்த எம்பிரானை வணங்கி, இப்பொழுது சற்றே அயர்வு தந்து மேலும் படிப்படியாக வாக்குகளை பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு, சத்சங்கத்திற்குப் பிறகு இறையருளால் யாங்கள் கூறுவோம் என்று கூறி படிப்படியாக அனைவரும் உயர நல்லாசிகள். 

No comments:

Post a Comment