எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, September 2, 2018

மஹான்களின் தேசம் -2



கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்த சக்கரத்திற்கு ‘ஆக்ஞா சக்கரம்’ என்று பெயர். அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம். அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் .

        திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் எங்கிருந்து           தொடங்குகிறது என்பதை பற்றி பார்ப்போம்:

ஸ்ரீ கண்டசிவம்
-நந்தியம் பெருமான்
-சனற்குமாரர்
-சத்தியஞானதரிசினிகள்
-பரஞ்சோதி முனிவர் மாமுனிவர்
-மெய்கண்டார் தேவ நாயனார்
-அருணந்தி சிவம் சிவாச்சாரியார்
-மறைஞானசம்பந்தர் சிவாச்சாரியார்
-உமாபதி சிவம் சிவாச்சாரியார்
-அருணமச்சிவாயர்
-சித்தர் சிவப்பிரகாசர்
   திருவாவடுதுறை ஆதீன குருமரபு: -
1 நமசிவாய மூர்த்திகள் 
2. மறைஞான தேசிகர் 3. அம்பலவாண தேசிகர்

4. உருத்திரகோடி தேசிகர் 5. வேலப்ப தேசிகர்

6. குமாரசுவாமி தேசிகர் 
7. (பின்) குமாரசுவாமி தேசிகர்
8.மாசிலாமணி தேசிகர் 9. இராமலிங்க தேசிகர்
10. வேலப்ப தேசிகர் 11. (பின்) வேலப்ப தேசிகர் 
12.திருச்சிற்றம்பல தேசிகர்
13.அம்பலவாண தேசிகர்
14. (வேளூர்) சுப்பிரமணிய தேசிகர்
15. அம்பலவாண தேசிகர்
Image may contain: 1 person, text16. (மேலகரம்) சுப்பிரமணிய தேசிகர்
17.அம்பலவாண தேசிகர்
18. சுப்பிரமணிய தேசிகர்
19. வைத்தியலிங்க தேசிகர்
20. அம்பலவாண தேசிகர்
21. சுப்பிரமணிய தேசிகர்
22. அம்பலவாண தேசிகர்
23.சிவப்பிரகாச தேசிகர்

தற்போது 24-ஆவது குருமஹா சந்நிதானம்  அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் 22.11.2012 முதல் இவ்வாதீன ஞானபீடத்தில் வீற்றிருந்து அருளாட்ச்சி செய்து வருகிறார்கள் .
🐠பூலித்தேவனுக்கு அருள் செய்த வேலப்ப தேசிகர்!🐠
ஆதித் திருமுறையை அடித்தளமாக வைத்து திருகயிலாய பரம்பரை என உருவாகியது தான் திருவாவடுதுறை. இறையருட் செல்வரான ஸ்ரீ  வேலப்ப தேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.
வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை மனதார வணங்கி அங்கே முகாமிட்டு தங்குவார். அப்போது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களுக்கும் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்ததுடன், மனதால் ஏற்படும் நோய்களையும் நீக்கிவைப்பார்.
இந்தப் பகுதியை ஆண்டுக்கொண்டிருந்த பூலித்தேவன், வேலப்ப தேசிகரை குருவாக ஏற்றுக்கொண்டார். எப்போதுமே வேலப்ப தேசிகரை வணங்கிய பின்பே, தனது தினசரி காரியங்களை கவனிப்பார். அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வந்தார்.
ஒருசமயம் பூலித்தேவருக்கு குன்ம வலி ஏற்பட்டது. இந்த வலியை சுவாமி தனது தவவலிமையால் போக்கினார். எனவே, சுவாமியின் ஆன்மிக பணிக்கு பூலித்தேவன் பல நிலங்களை வழங்கினார். அந்த நிலங்களில் மடம் அமைத்து, சுவாமி அருளாட்சி நடத்தினார்.
காலங்கள் கடந்தது. சித்தர் பெருமக்களுக்கு தன் உடலை துறந்து மறு உடலுக்கு செல்வதில்தான் எத்தனை அலாதி பிரியம் உண்டு. இதுபோலவே வேலப்ப சுவாமி சமாதி கொள்ளத் தீர்மானித்தார். தனது சீடன் பூலித்தேவனிடம் கூறி ‘சங்கரன் கோவில் மேலவீதியில் எனக்கு பூமிக்குள் தவமிருக்க ஏற்பாடு செய்’ என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது.
புரட்டாசி மாதம் மூலநட்சத்திரத்தில் அவர் மடத்தில், பூமிக்கு உள்ளே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு சென்று சமாதி நிலை அடைந்தார். அதன் மேலே சமாதி எழுப்பப்பட்டது.
இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வசித்த செல்வந்தர்கள் சமாதியை எப்படியும் இங்கிருந்து அகற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தனர். ‘மக்கள் குடியிருக்கும் இடத்தில் சமாதியா? கட்ட விடமாட்டோம்' என்று திரண்டு நின்றனர்.
பூலித்தேவன் விடவில்லை. தனது உறவினர்களையும், காவலர்களையும் கூட்டி வந்து சுவாமி சமாதியைக் காப்பாற்றினார். செல்வந்தர்களோ, எங்கள் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்றனர். ஆகவே, கலகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இருபக்கமும் சரி சமமாக மோதும் நிலை. ஒரு பக்கம் பூலித்தேவன் பட்டாளம். மறுபக்கம் செல்வந்தர்கள் பட்டாளம். என்ன நடக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களை யார் சமாதானம் செய்வார்கள் என்பதும் புரியாத நிலை. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அடக்க ஸ்தலத்தில் இருந்த சுவாமி ஸ்ரீ வேலப்ப தேசிகர், திடீரென்று பூமிக்கு மேலே வந்து நின்றார்.
இருதரப்பினரும் அதிர்ந்தனர். ‘நான் எங்கே சமாதி ஆகி இருக்கிறேன்..? உயிரோடு தான் இருக்கிறேன். நான் சமாதி ஆனால் தானே பிரச்சினை’ என்று கூறினார்.
இருதரப்பினரும் அதிர்ந்தனர். ஆகா.. இதுவரை சுவாமிகள் அடக்கம் ஆக வில்லை. ஐம்புலன்களையும் அடக்கி தவநிலையில்தான் இருந்துள்ளார் என ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு அனை வரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டனர்.
தற்போது கூட வேலப்ப தேசிகர் ஜீவசமாதியாக உள்ளார் என்று யாரும் நம்பவில்லை. சுவாமி உயிரோடு அமர்ந்து தியானத்தில் இருந்தப்படியே அருளாசி தருகிறார் என்றே நம்புகிறார்கள்.
வேலப்ப தேசிக சுவாமிகள் சமாதி அடைந்தபிறகு, பூலித்தேவனுக்கு ஒரு சூழ்நிலையில் உதவினார். அது பூலித்தேவன் வரலாற்றில் நடந்த பிரமிப்பான ஒரு நிகழ்வு.
1767-ல் பிரிட்டிஷ் தளபதி டொனர்டு பெரும்படை திரட்டி வந்து, நெற்கட்டான் செவல் கோட்டையை தகர்த்தான். மாவீரன் பூலித்தேவனைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோவிலின் வாசலுக்கு வந்த பூலித்தேவன், ‘இறைவனை வழிபட வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள்' எனக் கேட்டார்.
அதன் படி இறைவனை வழிபட பூலித்தேவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன், திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போய் விட்டார். அதன்பின் ஆங்கிலேயரால் அவரை பிடிக்கவே முடியவில்லை. இந்த உலகுக்கும் அவர் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.
எப்படி இது நடந்தது?. இது நடக்க யார் காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வேலப்ப தேசிகர் மூலமாகவே விடை கிடைத்தது.
பூலித்தேவனை கைது செய்து, ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது, ஸ்ரீ வேலப்பதேசிகர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் பூலித்தேவன் நின்று, தனது குருவை நோக்கி மனதுருக வேண்டினார். ‘நான் மானத்தோடு வானம் செல்லுதற்கான வரத்தைத் தந்தருளுங்கள்’ என்றார்.
உடனே சூட்சும உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர், பூலித்தேவனுக்கு மட்டுமே தென்பட்டார்.
‘சீடனே வா என்னோடு’ என்று முன்னால் சென்றார். பின்னால் நடந்தான் மாவீரன். ஆலய வாசலில் நின்று சாமி கும்பிட அனுமதி பெற்றார். வெள்ளையரும் அனுமதி கொடுத்தார்கள். உள்ளே போன குருவின் பின்னே இவரும் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் தானே அவரது விலங்கு சுக்கு நூறாக உடைந்தது.
சுவாமி சன்னிதி அருகே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் அவரை நிறுத்தி வைத்தார் குரு. ‘பூலித்தேவா! இனி நீ யார் கண்ணிலேயும் படமாட்டாய்! உடலோடு சொர்க்கம் சேர்வாய்’ என்று தியானத்திலே மூழ்கினார் அருவ நிலையில் இருந்த வேலப்பர்.
குரு மொழிக்கு ஏது மறு மொழி...?. அப்படியே நடந்தது. பூலித்தேவன் சொர்க்கத்துக்கே சென்று விட்டார்.
வெள்ளையர் பட்டாளம் ஆலயம் முழுதும் சல்லடை போட்டு சலித்தது. பீரங்கியும், துப்பாக்கியும் பிரணவத்தை வெல்ல முடியுமா என்ன?. ஆங்கிலேயர்கள் தோற்றுப் போனார்கள்.
ஆனாலும் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்று ஏதோ ஒரு பிணத்தை களத்து மேட்டில் வைத்து தீயிட்டு, இதுதான் பூலித்தேவன் என்று அவரது வழக்கை ஆங்கிலேய நிர்வாகம் முடித்து விட்டது என்பது இப்பகுதி மக்கள் தற்போதும் பேசும் ஒரு வரலாறு ஆகும்.
பிரம்மரிஷி விசுவாமித்திரர் கூட, திரிசங்குக்கு நிரந்தர சொர்க்கத்தை தர முடியவில்லை. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக விளங்கிய வேலப்ப தேசிகர், பூலித்தேவனை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த கலியுகத்தில் இது எவ்வளவு பெரிய விந்தையான செயல்.
சங்கரன்கோவிலில் தற்போதும் சங்கர நாராயணர் கோவில் உள்ளே பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. இதுதான் பூலித்தேவன் காணாமல் போன இடம். அதற்கான அறிவிப்பு பலகையுடன் அந்த அறை நமக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல அற்புதங்களை பழங்காலத்தில் நிகழ்த்திய வேலப்பர் தேசிகர், தற்போதும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். இங்கு விளக்கு போட்டு தேசிகரை வணங்கி வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.
ஒருவர் தன் வாழ்வில் பிறவி எடுப்பதே தன்னுடைய கர்ம வினையை போக்கத்தான். வேலப்ப தேசிகரின் சமாதிக்கு வந்து வணங்கி நின்றால், அவர்களுடைய கர்ம வினை போக்கப்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
வேலப்ப தேசிக மூர்த்திகள் ஜீவ சமாதி நிலையிலிருந்து தம்மை வணங்க வரும் அனைவருக்கும் திருவருளும் குருவருளும் வழங்கி அருள்கிறார்கள். இவ்விடத்தில் நாள்தோறும் வழிபாடும், வியாழக்கிழமை தோறும் வார வழிபாடும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூலநட்சத்திரம் அன்று குருபூஜையும் நடைபெறும். குருபூஜையில் சாதுக்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அன்றைக்கு அன்னதானம் மிக பிரமாண்டமாக நடைபெறும்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரத வீதியில் சங்கரநாராயணர் கோவிலுக்கு பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சுவாமிகளின் சித்தர் பீடம் உள்ளது. திரு நெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நேரடி ரெயில் வசதியும் உள்ளது.
நோய் தீர்க்கும் ஸ்ரீசக்கரம் :
ஆதிசங்கரர் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தவர். அவரை பின்பற்றியே வேலப்ப தேசிகர், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் ஒன்றைப் பதித்து அருளினார். எனவே இவரை ஆதிசங்கரரின் மறு அவதாரம் என பக்தர்கள் போற்றுகிறார்கள். ஸ்ரீ சக்கரம் முன்பு அமர்ந்து வழிபடுவோர் பில்லி, சூனியம், சித்தப்பிரமை போன்றவை நீங்கப் பெறுகிறார்கள்.
பொதுவாக ஸ்ரீ சக்கரம் கோவிலில் மூல ஸ்தானத்துக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் சங்கரன்கோவிலில் மட்டும் மூலஸ்தானத்தில் வெளியே தரைப்பகுதியில் ஸ்ரீசக்கரத்தினை, வேலப்ப தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், தன் உடலில் உள்ள எதிர்மறை சக்தி அனைத்தையும் நம்முடைய மூலாதர சக்கரம் வழியாக ஸ்ரீசக்கரம் பெற்றுக்கொள்ளும். சங்கரன்கோவிலில் உள்ள பல பெருமைகளில், வேலப்ப தேசிகர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரமும் ஒன்று. எனவே இந்த சக்கரத்தினை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.
பித்தேறியவர்கள், மனம் மிகக்குழம்பியவர்கள், நோய்களால் நலிந்தவர்கள், பேய்களால் கோட்பட்டதாக கருதப்படுபவர்கள், பயந்தவர்கள், பில்லி, சூனியங்களால் தாக்கப்பட்டதாக கருதப்படுகிறவர்கள் அங்கே சென்று அம்பிகையை வழிபட்டு, தியானித்து வேண்டினால் எல்லாம் சரியாகிறது என்று செய்திகள் கூறுகின்றன. 

” பேய் வாயிற் பட்டாரும் பித்து மிகப் பெற்றாரும்

நோய்கள் சால உற்றாரும் நுழைந்து அருட் சன்னதியில்

தாய் நீயே சரணமென்று தவங்கிடந்து சுகமுறுவர்

வாய்மையிது முக்காலமு மாண்பு நிறை கோமதியே”

- கோமதி சதரத்ன மாலை
சமாதி ஆனவர் உயிருடன் வந்து சமாதானம் செய்த அதிசயம்!
திருவாவடுதுறை ஆதினம் 10வது குருமகாசன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ வேலப்பதேசிகர்.18ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மாவீரன் பூலித்தேவனின் நோய் தீர்த்தவர். சங்கரன்கோவில் கோமதிஅம்மன் மீது அளவில்லா பக்தி கொண்டவர். அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்ததும் இவரே.
இதில் அமர்ந்து அன்னையை பிரார்த்தனை செய்து இன்று வரை பலன் பெற்றோர் ஏராளம்.

சங்கரன்கோவில் திருக்கோவிலுக்கு பின் மேலரதவீதியில் இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் இவரது திருவுருவசிலை அமைக்கப்பட்டு ஆலயம் உள்ள்து. திருக்கோவில் ரதவீதியில் சமாதி அமைக்கக்கூடாது என  அப்பகுதி மக்கள் எதிர்த்தனர்.சுவாமியின் அடியார்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலகம் ஏற்படும் நிலை.அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.சமாதியில் இருந்து வெளியே வந்த சுவாமிகள் தான் துரியாதீத நிலையில் உயிருடன்  இருப்பதாகவும் இறக்கவில்லை என்று கூறி மறைந்தார். இன்றும் நான் உட்பட அநேகர்களுக்கு அவர் தரிசனம் கிடைக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.இங்கு உள்ள  இரட்டை விநாயகரும் அதீத சக்தி கொண்டவர்.இங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து பலன் பெற்றோர்ஏராளம்.தமிழ்ஆண்டு புரட்டாசி மாதம் மூலம் நட்சத்திரம் இவர் ஜீவசமாதி ஆன நாளில் குருபூஜை அன்னதானம் மலர்முழுக்கு நடைபெறுகிறது.தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம்.தியானம் செய்வதற்கு அருமையான சன்னதி.குரு தரிசனம் கோடி புண்ணியம்....
புற்றாக வளர்ந்து நிற்கும் சித்தர்!
நெல்கட்டும்செவல் ஜமீன்தாரை பற்றி பலரும் அறிந்திருக்கலாம். அவர் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட மன்னர். ஆனால் அவரது வாரிசுதாரர் ஒருவர் சித்தராக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும்.
18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த வரலாறு இது.
நெல்கட்டும் செவல் பாளையத்தின் ராணி, கோமதிமுத்து நாச்சியார். அவரது தந்தையான வீராதி வீரர் புலித்தேவர் மறைந்து விட்டார். அவருக்குப் பின் ஆட்சி செய்த ஆண் வாரிசு இல்லாததால், பாளையத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு, ராணி கோமதிமுத்து நாச்சியார் வசம் வந்து சேர்ந்தது.
வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு பக்கம். கூட இருந்தே குழி பறிக்கும் பக்கத்து பாளையக்காரர்களின் வஞ்சகம் ஒரு பக்கம். ராணி என்னதான் செய்துவிட முடியும். ‘இந்தச் சிக்கலான சூழ்நிலையில் கணவர் ராமர் பாண்டியன் தன்னுடன் இருந்திருந்தால் இவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்காதே?’ என்று நினைத்து மனம் குமுறினார், ராணி கோமதிமுத்து நாச்சியார்.
ராணியின் கணவர் ராமர் பாண்டியன், ஒரு வித்தியாசமான மனிதர். கோமதிமுத்து நாச்சியாருடன் குடும்ப வாழ்க்கை நடத்தும் போதே, ராமர் பாண்டியனின் மனம் துறவு வாழ்க்கையை நாடிச் சென்றது. மகராஜா புலித்தேவரின் மரு மகன் என்று பெருமை பட்டுக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. எப்போதுமே தத்துவ விசாரணையிலேயே தன் மனதைக் கொண்டு சென்றார். அரச பந்தங்களை விட்டு அகன்று செல்லத் துடித்தார். எங்காவது மடத்தில் சேர்ந்து துறவியாகி விடலாமா? என்று கூட சிந்தித்துக்கொண்டிருந்தார்.
தம்பதிகளின் ஐந்து வருட இல்லற வாழ்க்கையில் ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் கொடி சுற்றிப் பிறந்தது. கொடி சுற்றிப்பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது. குறிப்பாக தாய்மாமனுக்கு ஆகாது என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறிவிட்டார்கள். திகைத்தார் கோமதிமுத்து நாச்சியார். குழந்தைக்கு அமுது கொடுக்காமலும் கவனிக்காமலும் விட்டு விட்டார். குழந்தை இறந்துவிட்டது. மனமுடைந்தார் ராமர் பாண்டியன். அவரால் அரண்மனையில் இருக்க முடியவில்லை. கால்போன போக்கில் நடந்தார். கண்காணாத தேசத்துக்கு சென்றுவிட்டார்.
கணவனைக் காணாத கோமதிமுத்து நாச்சியார், கவலையில் மூழ்கினார். தந்தை புலித்தேவர், சகோதரர்கள் சித்திர புத்திரதேவர், சிவஞான பாண்டியன் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் ஆதரவு தந்தனர்.
தந்தையும், சகோதரர்களும் மரணமடைந்து விட்ட பின்னர்தான், தானே ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்து விட்டது. தனது ஆட்சிக்கு துணையாக அனுபவம் நிறைந்தவர் தேவை. எனவே ராமர் பாண்டியனை எட்டு திக்கும் தேடினார்கள்.
எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையே?. அவர் ஆன்மிகத்தில் மூழ்கி விடுபவர். எங்காவது ஆதினத்தில் சேர்ந்திருப்பார். எந்த ஆதினமாக இருக்கும் என்பது தான் தெரியவில்லை. அரண்மனையைச் சேர்ந்த சங்கு முத்துப்பிள்ளை என்பவர் அவரை தேடி அலைந்து கொண்டிருந்தார்.
திருவாவடுதுறை ஆதினத்தில் ஒருவர் ஆன்மிகத்தில் மூழ்கி கிடந்தார். வழிபாடுகளில் தினமும் கலந்து கொண்டார். நந்தவனத்தைப் பராமரிக்கும் தோட்டக்காரனாக பணிபுரிந்தார். அவர்தான் ராமர் பாண்டியன். அங்கு தன்னை அரசனாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. காவி உடையில் காட்சியளித்தார்.
திருவாவடுதுறையின் 11-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்ந்த காலம் அது. சின்னப்பட்டம் திருச்சிற்றம்பலம் தேசிகர், சன்னிதானத்துக்கு நெல்கட்டும் செவல் ராணியிடம் இருந்து திருமுக ஓலை வந்திருப்பதாகச் சொல்கிறார். ஒடுக்கம் சாமிநாத தம்பிரான் அதை வாங்கி படிக்கிறார். ‘குருமகாசன்னிதானம் அவர்களே.. நமது திருமடத்தில் நெல்கட்டும் செவல் அரண்மனையை அலங்கரிக்கும் ராமர் பாண்டியன் நான்கு வருடமாக இருக்கிறாராம். அவரை அரண்மனைக்கு அனுப்ப வேண்டும் என மகாராணி ஓலை அனுப்பியுள்ளார்’.
‘அப்படியா? நம் திருமடத்தில் நெல்கட்டும் செவல் புலித்தேவரின் மரு மகன் இருக்கிறாரா?. அதுவும் நான்கு வருஷமாகவா?’ என்று ஆச்சரியப்பட்டார் சன்னிதானம். அவர் உடனடியாக தம்பிரானிடம், ‘திருமடத்தின் சத்திரத்தில் தங்கியிருக்கும் காஷாயம் வாங்காத துறவிகள் கூட்டத்தில் உடனடியாக விசாரியுங்கள்’ என்றார்.
ஓலை கொண்டு வந்த சங்கு முத்துப்பிள்ளை பாண்டியனை அடையாளம் காட்டினார். சன்னிதானத்தின் பாதங்களில் முறைப்படி விழுந்து நமஸ்கரித்த ராமர்பாண்டியன், அவர் முன்பு கைக் கட்டி வாய் மூடி நின்றார்.
‘நான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் ஆதினத்தில் இருந்தமைக்கு சன்னிதானம் அடியேனை மன்னிக்க வேண்டும்’ என மன்னிப்புக் கேட்டார்.
‘மன்னிப்பா! ராஜ வாழ்க்கை வாழக்கூடிய ஒருவர், துறவு வாழ்க்கையில் இங்கு அமர்ந்து எடுபிடி வேலையெல்லாம் செய்திருக்கிறார் என்றால், நீர்.. எவ்வளவு பெரிய தத்துவ ஞானி. ஆனாலும் ஆட்சி பொறுப்பை விட்டு துறவி பொறுப்பை ஏற்க முடியுமா..? இப்போது முடியாதே..' நிதானமாக யோசித்தார் சன்னிதானம்.
‘ராமர் பாண்டியரே! நீர்.. உடனே சென்று நெல்கட்டும் செவல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.
‘மனதளவில் துறவியான அடியேனால் இனி உலக வாழ்க்கையில் எப்படி ஈடுபட முடியும்?’ ராமர் பாண்டியன் கண் கலங்கினார்.
‘எதற்கும் மனம் கலங்க வேண்டாம் ராமர் பாண்டியனே. இன்றே இப்போதே நீர் நெல்கட்டும் செவல் மன்னராகிவிட்டீர். அதுவும், திருவாவடுதுறையில் இருந்து செல்கின்ற நீர் ‘ராஜரிஷி’ என்று அழைக்கப்படுவீர். உம்மை அங்குள்ள குடிமக்கள் போற்றுவார்கள்’ என்று கூறி, மிகவும் சிறப்பான பட்டு சால்வையை எடுத்து ராமர் பாண்டியனுக்கு போர்த்தினார். அதன் பின் சங்கு முத்துப்பிள்ளை கொண்டு வந்திருந்த பல்லக்கில் ஏறி புறப்பட்டார், ராமர் பாண்டியன்.
பல்லக்கு அரண்மனையை வந்தடைந்தது. மக்கள் குதூகலம் அடைந்தனர். ராஜரிஷியாக வந்திருக்கின்ற மகராஜாவை பார்க்க ஓடிவந்தனர். பட்டிதொட்டியில் இருந்தெல்லாம் வந்த மக்கள் வெள்ளம் அரண்மனையின் வாசலில் கரை புரண்டது. ராமர் பாண்டியன், தன் கழுத்தில் உத்திராட்சம் அணிந்திருந்தார். சன்னிதானம் அளித்த பட்டாடையால் உடம்பைப் போர்த்தியிருந்தார். ராணி கோமதிமுத்து நாச்சியாரோ, ராஜ சின்னங்கள் அனைத்தையும், உடைவாளுடன் அவர் பாதங்களில் சமர்ப்பித்தார். ‘ராமர் பாண்டிய மகராஜா வாழ்க’ என்ற மக்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெல்கட்டும் செவல் ராஜாவானார், ராமர் பாண்டியன்.
சில ஆண்டுகளே அவர் ராஜாவாக இருந்தார். ஆனாலும் அவரின் மனமோ ராஜாவாக இருக்க அவரை விடவில்லை. அவரின் ஆன்மிக நாட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. தன்னுடைய ஆட்சிக்கு உள்பட்ட பல நிலபுலன்களை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எழுதி வைத்தார். உதயமார்த்தாண்ட பூஜை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பல கோவில் திருப்பணிகளைத் தொடர்ந்தார். தான, தர்மங்களைச் செய்தார். தன்னுடைய குடிகளும் படை வீரர்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் குறைவில்லாமல் செய்து கொடுத்தார்.
தான் ஜீவ சமாதி ஆவதற்காக, நெல்கட்டும் செவலுக்கு வடக்கே நிஷோப நதிக்கரையில் மூன்று நீர் நிலைகள் ஒன்று சேரும் இடத்தைத் தேர்வு செய்தார். நாள்தோறும் அங்கு வந்து அமர்ந்து வெகுநேரம் தவம் செய்ய ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட நாள் வந்தது. அவரே கட்டிய சமாதியில் நிஷ்டையில் இருந்தபடியே ஜீவ சமாதி அடைந்தார்.
ஊர் மக்கள் இங்கு கோவில் அமைத்தனர். இந்தக் கோவிலில் உருவம் எதுவும் இல்லை. சமாதியில் ஆறு அடிக்கு அதிகமான உயரத்தில் ஒரு புற்று வளர்ந்திருக்கிறது. அந்த புற்றில் முகம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த புற்று மண் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்பது அந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
ராமர் பாண்டியன் ஜீவசமாதி உயிரோட்டம் கொண்டது. எனவேதான் இந்த புற்று மிக வேகமாக வளர்கிறது. இந்த புற்று கர்ப்பக்கிரக மோட்டை தொடும் அளவுக்கு உயர்ந்தது. இதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே புற்றில் ஈரத்துணியை நனைத்து போட்டு வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் முடியவில்லை. இறுதியில் ராமர் பாண்டியனிடம் விரும்பி வேண்டி தலையில் கவசம் ஒன்றை வைத்தனர். ஓரளவு புற்றின் வளர்ச்சி தடைபட்டது. ஆனால் அவர் வழங்கும் அருள் ஆசியை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.
நெல்லை மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் - பனையூர் செல்லும் வழியில், நெல்கட்டும் செவல் சாலையில் நிட்சோப நதிக்கரையில் ராமர்பாண்டியன் ஜீவசமாதி ஆலயம் உள்ளது. கரிவலம் வந்தநல்லூரில் இருந்து பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உள்ளது. இந்த ஆலயத்தின் நடை எப்போதும் திறந்தே இருக்கும். தீராத நோய் என்று மருத்துவர்கள் கைவிட்டவர்கள் கூட, இங்கு வந்து தங்கி நோய் தீர்ந்து செல்கின்றனர்.
அற்புதம் செய்த ராமர் பாண்டியன்
மடத்தில் இருந்து அரண்மனைக்கு வரும் போதே பல அற்புதங்களை செய்ய ஆரம்பித்தார் ராஜரிஷி. வழியில் பல்லக்கு தூக்கிகளுக்கு தாகம் எடுத்தது. உடனே பல்லக்கை நிறுத்த இடம் தேடினர். ஆனால், ராமர் பாண்டியனோ, ‘நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். பல்லக்கு அந்தரத்தில் நிற்கும்’ என்று கூறினார். அவர்களும் பல்லக்கை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.
என்ன ஆச்சரியம்! பல்லக்கு அப்படியே அந்தரத்தில் நின்றது. பின் அவர்கள் நால்வரும் தண்ணீர் குடிக்க அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றனர். அங்கு மந்திரம் தெரிந்த பெண் ஒருத்தி நின்றாள். அவள் பல்லக்கு அந்தரத்தில் நிற்பதைப் பார்த்தாள். ‘எவரோ ஒருவர் தன் எல்லைக்குள் வந்து வித்தை காட்டுகிறாரே’ என்று நினைத்தவள் தானும் பதிலுக்கு வித்தை காட்ட ஆரம்பித்தாள்.
அதன்படி தண்ணீரை கை நீட்டி குடித்த பல்லக்கு தூக்கிகள் நால்வர் கையும், அப்படியே ஒட்டிக்கொண்டது. அதை பிரிக்க முடியவில்லை. உடனே, அவர்கள் ராமர் பாண்டியனை நோக்கி ஓடி வந்தனர். ராமர் பாண்டியன் கோபத்துடன் தனது கையில் கிடந்த கடத்தினை தூக்கி நிறுத்தி, மந்திரவாதி பெண்ணை நோக்கி தனது தவ வலிமையைக் காட்டினார்.
அப்போது சூறாவளி போன்று காற்று அடித்தது. அந்தக் காற்று அந்தப் பெண்ணைத் தரையில் நிற்கவிடாமல் தூக்கியது. இதனால் பயந்து போன அந்தப் பெண் மந்திரவாதி, ராமர் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த நால்வரின் கையை பிரித்து விட்டுவிட்டார். இதனால் ராஜரிஷி என்று திருவாவடுதுறையில் பெயர் பெற்ற ராமர் பாண்டியன், மக்கள் மத்தியிலும் பெரும் பெயர் பெற்றார்.

இந்த தலத்துக்கு பல பெயர்கள் உண்டு. சங்கரன் கோவிலை பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்றும் அழைப்பார்கள்.  சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும் இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இதுவே ஆகும்.  இதில் தருகாபுரம் நீர்தலமாகவும், தென்மலை காற்றுத்தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் நெருப்புதலமாகவும், தேவதானம் ஆகாயத்தலமாகவும் அழைக்கப்படுகிறது.

 சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர். சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.

 இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும். நாகசுனைக்கு மேலும் பல அற்புதங்கள் உண்டு. இந்த சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம்.

கோவிலுக்கு பின் பக்கம் பாம்பாட்டி சித்தர் தவசாலை உள்ளது.  கோமதி மகிமை என்ற தலைப்பிலான மகாகவி பாரதியாரின் பாடல்கள் சங்கரன்கோவிலின் மகிமையைக் கூறுகின்றன. இத்தலத்தில் துர்க்கை தென்திசை நோக்கி வீற்றிருப்பதால் யம பயம் போக்குபவளாகத் திகழ்கிறாள்.

மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள் சங்கரலிங்கத்தின் மீது விழும் அற்புதம் இங்கு நிகழ்கிறது. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது. மரகதக்கல் பதிக்கப்பட்ட பள்ளியறையில் தங்க ஊஞ்சலில் தினமும் பள்ளியறை உற்சவம் நடக்கிறது.

அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை.  சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர்.

1 comment:

  1. கோமதி அம்மா....... 🪔🔱🪔...... கோமதி தாயே.......

    ReplyDelete