எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, September 6, 2018

திருஅண்ணாமலை சித்தர்கள் - 8


இதுவரை : மச்சமுனிவர், தான் கண்டுபிடித்த கல்யாண முருங்கை மற்றும் வெள்ளைப்புனல் மூலிகைகளின் அற்புதங்களை செயல்முறை விளக்கத்தோடு செய்து காண்பித்தது சிவபெருமான் உள்ளிட்ட முத்தேவர்களை மட்டுமின்றி, அங்கே கூடியிருந்த பிற சித்தர்கள், முனிவர்களையும் வியக்க வைத்தது.

இனி... 8.வெளிச்சத்துக்கு வந்த மரணமில்லா வாழ்வின் ‘ரகசியம்

கல்யாண முருங்கை, வெள்ளைப் புனல் மூலிகைகளின் அற்புதங்களை கூறிய மச்ச முனிவர், அடுத்ததாக, தான் கண்டுபிடித்த பேய்ச்சுரை, குருவரிக் கற்றாழை ஆகிய மூலிகைகள் பற்றி கூற நினைத்தார்..

              அப்போது அருணாச்சலேஸ்வரரே அவரை அழைத்தார்..

“மச்சமுனி! நீ மகாசித்தன் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே உன்னால் உண்டாக்கப்பட்ட மூலிகைகளின் செயல் கண்டு வியந்து போனோம். இப்போது பேய்ச்சுரை, குருவரிக் கற்றாழைப் பற்றி தெரிந்து கொண்டால் உலகமே வியந்து போகும். இதை பின்னர் விளக்குவாய். மற்ற சித்தர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். இதில் உனக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே..?“ என்று கேட்டார் “சத்தியமாக இல்லை ஐயனே! தாங்கள் அப்படி சொன்னதிலும் ஓர் உண்மை இருக்கிறது“ என்றார் மச்சமுனி..

“என்ன உண்மை?“

“தங்கள் அருளால் நான் கண்டுபிடித்த பேய்ச்சுரை மூலிகை, குருவரிக் கற்றாழையில் தெய்வ ரகசியம் இருக்கிறது. இதை இங்கு வெளிக்கொண்டு வரவா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இதைத் தாங்கள் முன்னதாக உணர்ந்து கொண்டீர்கள். இதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி தானே?“ என்ற மச்சமுனி, அருணாச்சலேஸ்வரர் பொற் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

“அப்படியென்ன தெய்வ ரகசியம் இந்த மூலிகைக்குள் இருக்கிறது? இதை ஒரு வார்த்தையால் சொன்னால் பெரிதும் மகிழ்வடைவேன்....“ என்று அங்கிருந்த பிரம்ம தேவன் யதார்த்தமாகக் கேட்டார்..

“சொல்லலாமே...“ என்ற மச்சமுனி, அதற்காக அருணாச்சலேஸ்வரரிடம் கண்களால் அனுமதி கேட்டார். “அது உன் இஷ்டம்..“ என்று கையைக் காண்பித்தார் இறைவன்.
“அந்த பேய்ச்சுரையையும், குருவரிக் கற்றாழையையும் முறைப்படி பதப்படுத்தி, பாதரசத்தோடு ஒரு பவுர்ணமி நாளில், சந்திரன் கிழக்குச் திசையில் உதிக்கும் போது ஓர் சுண்டைக்காய் அளவு உண்டால், அந்த நபருக்கு இறப்பு என்பதே கிடையாது...“ என்று மச்சமுனிச் சித்தர் சொன்னபோது எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி.!

அப்போது.....

“இது பூலோக மனிதர்களுக்காக உண்டாக்கியதா?“ என்று பிரம்மா கேட்டார்...

          “அப்படிப்பட்ட எண்ணத்தோடுதான் மூலிகையைத் தயாரித்தேன்.

“ஒருவேளை இந்த மூலிகை ரகசியம் அசுரர்களுக்கும் தெரிந்து, அதனை அவர்கள் உண்டு விட்டால்? என்றார் அருணாச்சலேஸ்வரர்.

“கவலைப்பட வேண்டாம் ஐயனே! என்னிடம் இருக்கும் சித்தர்கள், எப்படிப்பட்ட மூலிகைகளைக் கண்டுபிடித்தாலும், எதிராளிகளுக்கு முற்றிலும் போய்ச் சேர்ந்து விடாதபடி அதில் ஒரு ரகசியம் வைத்திருப்பார்கள்...., அதனால் இந்த இரு மூலிகைகளை அசுரர்கள் உண்டால் மாத்திரம் அவர்களுக்கு ஆயுள் நீடிக்காது...“ என்று இறைவனது சந்தேகத்திற்கு ஓர் முற்றுப்புள்ளியை வைத்தார் அகத்தியர்..

இருந்தாலும் இதையெல்லாம் அசுரர்களின் தலைவனான ஒருவன், சித்தர்களோடு சித்தராக மாறுவேடத்தில் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தான்.. அவன் மனதில் ஒரு கெட்ட எண்ணம் உடனே தோன்றியது.

இந்த மச்சமுனியை அப்படியே யாருக்கும் தெரியாமல் இந்த அண்ணாமலைக் காட்டில் இருந்து தூக்கிக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்தில் வைத்து மிரட்டி, அடித்து உதைத்து, அந்த இரு மூலிகையின் ரகசியங்களை பெற்றுக்கொண்டு விடவேண்டும்‘ என்று எண்ணினான்..

அப்போது , அருணாச்சலேஸ்வரரிடம் வாழ்த்துக்களைப் பெற்று, சித்தர்களோடு சித்டராக கூட்டத்தின் நடுவில் அமர்ந்தார் மச்சமுனி.

அடுத்து யாரை அழைக்கலாம்.. என்று அகத்தியர் எண்ணி, தனது கண்களை சுழல விட்ட போது கோரக்கர் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“வல்லவர்களுக்கு எல்லாம் வல்லவரும், சித்தர்களிடம் ஒரு மாறுபட்ட தன்மை கொண்டவருமான கோரக்கர் சித்தர் சபைக்கு வரட்டும்.... “ என்று அழைத்தார் அகத்தியர்.

அப்போது –

           திடீரென்று பூமியில் இருந்து பெரும் புகை எழுந்தது. அதில், அண்ணாமலையே ஆடியது. வானத்தில் கருமேகம் சூழ்ந்தது., மரங்கள், கொடிகள் எல்லாம் வேரோடு பூமியில் விழுந்தன. எங்கும் இருட்டு மயம். புகை மயம், ஒருவர் கண்ணுக்கு ஒருவர் தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று யாரும் தெரிந்து கொள்ளாமல் ஒரு நாழிகை துடித்தனர்.

அடுத்த நாழிகையில் பழையபடி அண்ணாமலையும், அதனைச் சேர்ந்த வனமும் இயற்கை நிலையை அடைந்தது. ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று எல்லோரும் நினைத்தபோது இது கோரக்கர் செய்கின்ற சித்து வேலையாகத்தான் இருக்கும் என்று தான் எண்ணினார்கள்..

ஆனால்....  – இந்த இயற்கை மாற்றத்தை கோரக்கர் செய்யவில்லை. வேறு யாரோ செய்திருக்கிறார்கள் என்று பின்னர் தெரிய வந்தது.

அருணாச்சலேஸ்வரர் உள்பட அத்தனை தெய்வங்களும் கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்த இந்த இயற்கையின் மாற்றம் என்னவென்று உணரும் முன்பு அங்கு மச்சமுனியைக் காணவில்லை.

அவர் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாரோ அந்த இடம் பெரும் பள்ளமாக காணப்பட்டது.

ஒரே வினாடியில் இதனை உணர்ந்த அகத்தியர் நேராக அருணாச்சலேஸ்வரர் அருகில் சென்று, “இது இங்கிருக்கும் அரக்கர்களின் தலைவன் செய்த வேலை. நமது சித்தர் மச்சமுனியை மீட்டுக் கொண்டு வருகிறேன் என்றார்.

அமைதியாக கேட்ட அருணாச்சலேஸ்வரர், “அகத்தியனே, தாங்கள் வெளியே சென்றால் விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிடும் இது என்னுடைய மலை – வனம்., நானே மச்சமுனியை மீட்டுக் கொண்டு வருகிறேன்“ என்றார்.

“தாங்கள் தான் இந்த விழாவின் நாயகர் தாங்களே இங்கிருந்து சென்று விட்டால்...? என்று இழுத்தார் அகத்தியர்.. நடக்கப்போகும் வேடிக்கையை மட்டும் பார். கோரக்கர் தன் சித்தத் தன்மையை காட்டட்டும்.. நான் இங்கிருந்து அதனையும் பார்ப்பேன். அந்த அரக்கனை விரட்டிச் சென்று மச்சமுனிச் சித்தரையும் மீட்டு வருவேன்.... என்றார் அருணாச்சலேஸ்வரர்.

..... சித்தர்கள் வருவார்கள்...!

No comments:

Post a Comment