எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, September 23, 2018

துக்காராம்

17 ஆம் நூற்றாண்டில் “மராட்டிய” மாநிலத்தில் வாழ்ந்த ஞானி “துக்காராம்”ஆவார்.

கிருஷ்ண பக்தரான துக்காராம் தனக்கென உள்ளதைப் பிறருக்கு கொடுத்து மகிழ்பவர். ஒருநாள் அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி, சந்தையில் விற்று வரும்படி அனுப்பி வைத்தாள். ஏழைச் சிறுவன் ஒருவன் வண்டியைப் பின் தொடர்ந்தான். கரும்பு தின்ன வேண்டும் என்ற ஏக்கம் அவன் முகத்தில் வெளிப்பட்டது. கையில் காசில்லை. இதை உணர்ந்த துக்காராம் சிறுவனுக்கு ஒரு கரும்பை அன்புடன் கொடுத்தார். அதைக் கண்ட மற்ற சிறுவர்களும் துக்காராமைச் சூழ்ந்து விட்டனர். இப்படியே போவோர் வருவோரெல்லாம் ஆளுக்கொரு கரும்பாக வாங்கிச் செல்ல, மொத்தக் கரும்பும் காலியானது. கடைசியில் ஒரே ஒரு கரும்பு மட்டும் மிச்சமிருந்தது. 

-
துக்காராம் வீடு வந்து சேர்ந்தார். விஷயமறிந்த அவரது மனைவிக்கு கோபம் தலைக்கேறியது. ஒற்றைக் கரும்பைக் கையில் எடுத்தாள். கணவரை ஆத்திரம் தீர விளாசித் தள்ளினாள். அந்த தண்டனையையும் மனைவி அளித்த பரிசாக ஏற்றுக் கொண்டார் துக்காராம். அடித்ததில் கரும்பு இரண்டு துண்டாக ஒடிந்து விழுந்தது. அதைக் கண்டதும் துக்காராம், “என் அன்பே...! ஒற்றைக் கரும்பு ஒடிந்ததும் நன்மைக்காகத் தான். இருவரும் ஆளுக்கொரு துண்டாக சுவைத்து மகிழலாம்” என்று சொல்லி சிரித்தார். இதைக் கேட்ட மனைவியும் கோபம் தணிந்து சிரித்து விட்டாள்.
-
தன் வாழ்வில் எத்தகைய துன்பங்களை சந்தித்த போதும் எப்போதும் தர்மம் தவறாமல், இறைவனின் மீது எந்நேரமும் பக்தி கொண்டு, தன் சக மக்களுக்கு தனது பாடல்கள் மூலம் நல்ல விஷயங்களை போதித்து வந்தார் துக்காராம். அப்படிப்பட்ட துக்காராமை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்ள விரும்பிய அந்த “பரந்தாமன்’ ஒரு இரவு துக்காராம் உறங்கும் போது அவரின் கனவில் தோன்றி, துக்காராமின் பக்திக்கு தாம் தரும் வரமாக வருகிற “ஏகாதசி” தினத்தன்று “தேஹு” எனும் இடத்தில் துக்காராம் தனது “மனித சரீரத்தோடு” வைகுண்டம் வர தன்னுடைய “கருட வாகனத்தை” தாம் அனுப்புவதாகவும், அதில் ஏறி துக்காராம் தன் வைகுண்டலோகத்தை அடையுமாறு கூறி மறைந்தார்.
-
இக்கனவைக் கண்டு மிகவும் மகிழ்ந்து தூக்கத்திலிருந்து எழுந்த துக்காராம் தன் மனைவி ஜிஜியாவிடம் இக்கனவைப் பற்றி கூறினார். அதற்கு ஜிஜியா துக்காராம் தன்னை சிரிக்க வைக்க இவ்வாறெல்லாம் அவர் கூறுவதாக கூறி மீண்டும் உறங்கினார். சில நாட்களில் அந்த ஏகாதசி நாளும் வந்தது பெருமாள் தன்னிடம் கூறியது போலவே அந்த தேஹு எனும் இடத்திற்கு வந்தார். ஊர்மக்கள் எல்லோரும் அங்கு கூடியிருந்தனர் அப்போது வானிலிருந்து மஹாவிஷ்ணுவின் கருட வாகனம் கீழே வந்து இறங்கியது.
-
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரையும் வணங்கி, விஷ்ணுவை புகழ்ந்து கீர்த்தனைகளை பாடியவாறே அந்த கருட வாகனத்தில் ஏறி அமர்ந்தார் துக்காராம். அப்போது வெளியே எங்கோ சென்றிருந்த அவரின் மனைவியான ஜிஜியாவிடம் யாரோ ஒருவர் இவ்விஷயத்தைப்பற்றி கூற, அன்று இரவு தன் கணவர் கூறியது உண்மைதான் என உணர்ந்து, அவரை வைகுண்டம் செல்ல விடாமல் தடுக்க வேகமாக ஓடோடி வந்தார். ஆனால் அவர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் பார்த்திருக்க அந்த கருட வாகனத்தில் விண்ணுலகம் சென்று மறைந்தார் துக்காராம். இதைக் கண்டு அதிர்ந்த அவரின் மனைவி ஜிஜியா அங்கேயே இறந்து விட்டார். இத்தகைய மகான்கள் நம் நாட்டில் அவதரித்து நாம் செய்த பாக்கியம் தான்.
-
தன் பணியை தானேதான் செய்ய வேண்டும் ..!

மகாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அர்ஜுனனின் தேருக்கு சாரதியாக இருந்து வழி நடத்தினார். மாலை நேரத்தில் சூரியன் மேற்கில் மறைந்தான். போர் நிறுத்தப்பட்டது. எல்லாரும் பாசறைக்குத் திரும்பினார்கள். கண்ணனும் அர்ஜுனனும் ஓய்வெடுத்துக் கொண்டனர். அர்ஜுனன் யுத்தம் செய்த களைப்பில் தூங்கி விட்டான். கண்ணன் குதிரை லாயத்திற்கு சென்று குதிரையை தேங்காய் நாரினால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். குதிரையின் கனைப்பைக் கேட்ட அர்ஜுனன் எழுந்து வந்தான். பணியாட்கள் செய்யும் வேலையை, கண்ணன் செய்வது கண்டு திகைத்தான். “என்ன கிருஷ்ணா! இந்த வேலையைக் கூடவா நீ செய்ய வேண்டும்? என்றான். “கடமை என்று வந்து விட்டால், அதை முழுமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. நீ எனக்கு சாரதி பணியைக் கொடுத்தாய். சாரதி தானே குதிரைகளுக்கு பொறுப்பாளன். அந்தக் கடமையைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீயும் எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய். எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறி விடு. வெற்றி உன் கையில்! என்று உபதேசம் செய்தார். கண்ணனின் கடமை உணர்வு கண்டு அர்ஜுனன் வியந்தான்.



கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் .
திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.

அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .
துண்டைக் கயிறாக்கியவர்
*************************************
தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார்.

அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர். அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம்.
இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார். தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .
சொன்ன நாளில் சமாதி
********************************
ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் .

சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் .
அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் .
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் . அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.
“ சாதி யாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்”
“ சாதி பேத மோதுகின்ற தன்மை யென்ன தன்மையே”
என்று சிவவாக்கியர் கூறியது போல் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இந்து சமய நெறிகளின் படி நடைபெறும் பூசைகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நடத்தி வருவது சுவாமிகளின் திருவருள் என்றே கூறலாம்.
பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து நிற்கும் என்று திருமூலர் கூறியபடி மதுரை கா.ம. அலாவுதீன் ராவுத்தர் அவர்கள் தம் மனதில் குடிகொண்ட ‘ஸ்ரீமௌன குரு’ என்ற ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பிப் பூசித்துவந்ததால், ரெட்டி சுவாமிகளின் ஜீவசமாதியில் ராவுத்தரின் புகைப்படத்தை வைத்துப் பூசித்து வருகிறார்கள் . ஜீவசமாதியில் சிவமாக வீற்றிருக்கும் கற்றங்குடி ரெட்டி சுவாமிகளை நினைக்கும்போது அலாவுதீன் ராவுத்தரின் நினைவும் வருவதே இதற்கு சாட்சியாகும்.

No comments:

Post a Comment