எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 28, 2020

அகத்தியெம்பிரானின் அருளுரைகள் - 3


தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ?

இறைவன் அருளாலே இஃதொப்ப லோகாய விஷயங்கள் எதுவும் வேண்டாம். இறைவன் தரிசனம்தான் வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் அடுத்த கணம் இறை தரிசனமும், எம் தரிசனமும் அனைவருக்கும் உண்டப்பா. இறைவன் தரிசனம் இல்லையென்றால் என்ன பொருள் ? என்றால் இறைவனை பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் யாரும் செல்வதில்லை. எனக்கு இந்த பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை தீர்த்துக் கொடு என்றுதான் இறைவனிடம் எல்லோரும் செல்கிறார்கள். எனவே இறைவனை பார்க்க வேண்டும் என்று யாராவது உண்மையாக சென்றால் கட்டாயம்
இறை தரிசனமும்சித்தர்களின் தரிசனமும் கிடைக்கும்.


ஆதியிலே பாவ வினைகள் எப்படி ஏற்பட்டது ?


பாவம் என்பதே, பரம்பொருள் ஏகனாக இருக்கும்பொழுது சகலமும் பரம் என்ற நிலையில் இல்லை. பரம் தன்னுடைய தரம் தாழும் என்று அறிந்தோ, அறியாமலேயோ தன்னிடமிருந்து சிறிய, சிறிய ஆத்மாக்களையெல்லாம் பிரித்து அனுப்பும்பொழுதே அங்கே பாவங்கள் உற்பத்தியாகிவிடுகிறது. எல்லாவகையிலும் சுகத்தையும், எல்லா வகையிலும் உயர்வையும் தந்து ஒரு பிறவியை முதலில் படைக்கும்பொழுதே தனக்கு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது, பிறருக்கு நன்மைகளை செய்வதற்குதான் என்று மனிதனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களோ சமயத்தில்புரிந்துகொள்ளாமல் ஆணவத்தால் தவறுகள் இழைக்கும்பொழுது அங்கே முதல் பாவம் தோன்றுகிறது. அந்த முதல் பாவத்தால் சற்றே தரம் குறைந்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கே பாவத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் தந்தாலும் நீக்குவதற்கு பதிலாக, மேலும், மேலும் பாவங்களை சேர்த்துக் கொள்ள, அடுத்தடுத்து பிறவிகள் சங்கிலி போல நீள்கிறது.



அப்படியென்றால் பிரபஞ்சத்தில் அனைவரும் திருந்தி வாழ வழியே இல்லையா ?
அதற்கு வழிகாட்டினால் அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.



இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எஃதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ, மகான்களோ, மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பலகோடி தவங்கள் செய்து, மனிதனைவிட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ, யக்ஷனாகவோ இருக்கக்கூடிய ஒருவன் எஃதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் இறைவனை தூஷிக்கிறானே, நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா ? எதற்காக தக்ஷன் ( செய்த ) யாகத்தில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் ? விதி. நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும்இறைத்தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ, அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எஃதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், நீ கூறியதுபோல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கிவிட வேண்டிய நிலையில் மனிதனோ, தேவர்களோ, மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இஃதொப்ப நிலை உருவாகிறது.



No comments:

Post a Comment