ஆலயத்திற்கு என்றால் ஈகின்ற மாந்தன்,வறியவருக்கு என்றால் ஈயாது உள்ளார். வழுத்துவேன்! லகரம், ககரம் குடிலுக்கு ஈந்துவிட்டு, ஏகம் கூட ஏழைக்கு ஈயா மாந்தனுக்கு ஏகபோதும் இறையருள் கிட்டாது.கிட்டாது என்பதை யாங்கள் காலகாலம் வலியுறுத்தி வந்தாலும், இதனை மாந்தர் ஏற்காமல் உள்ளனர்.
சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் வென்றுவிடலாம் அல்லது கோடானுகோடி பிறவிகள் எடுத்தும் வெல்லலாம். நீ ( முன்பு ) கூறினாயே திண்ணியம், அது மனிதன் மனதிலே வந்துவிட்டால் உடனே கூட இது நடக்கலாம். எப்படியென்றால் ‘ காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே ‘ என்ற வாசகம் ஒரு பட்டினத்தானை இல்லறவாசியிலிருந்து துறவறம் ஆக்கிவிட்டது. ஆனால் அந்த வாசகம் எத்தனை பேரை அவ்வாறு துறவறம் ஆக்கும் ? அந்த வாசகத்தின் பொருள் அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் எல்லோராலும் சட்டென்று எல்லாவற்றையும் மனதளவிலே விட்டுவிட்டு வெளியே வரமுடிகிறதா ? எனவே பற்றும், பாசமும், தீவிர ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் புலன்களை வெல்லுவது என்பது கடினம். பற்றையும், பாசத்தையும் மெல்ல, மெல்ல விட்டுக்கொண்டே வரவேண்டும். பற்றையும் விடுகிறேன், பாசத்தையும் விடுகிறேன் என்பதற்காக குடும்ப அங்கத்தினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்தால் அது ஒரு தோஷமாக மாறும் என்பதை மனிதர்கள் மறந்துவிடக்கூடாது..
இந்த உணவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இந்த உணவுதான் என் நாவிற்கு பிடித்திருக்கிறது. இந்த பானம்தான் எனக்குத் தேவை. இந்தவிதமான படுக்கைதான் எனக்குத் தேவை என்று எதையெல்லாம் ஒரு மனிதன் வேண்டும், வேண்டும் என்று எண்ணுகிறானோ, அவையெல்லாம் இல்லாவிட்டால் என்ன ? என்று ஒவ்வொரு முயற்சியாக செய்து பார்த்தால் கட்டாயம் எண்ணியது நிறைவேறும். ஆனாலும்கூட இதற்கு முன்னால் அவனைப் பற்றியுள்ள கர்மவினைகளிலிருந்து வெளியே வரவேண்டும். எனவே எளிய வழி பக்தி மார்க்கம். பலவிதமான ஸ்தலங்களுக்கு சென்று மானசீகமாக பிரார்த்தனைகளை செய்துகொண்டே வர மெல்ல, மெல்ல அதீத பற்றும், பாசமும் குறைய கட்டாயம் நீ எண்ணுவதுபோல புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும் மெல்ல, மெல்ல வெல்லக்கூடிய நிலை வரும்.
மனம் லௌகீக சுகங்களை இறை நோக்கி. விளம்பிடுவோம் வெறும்
லௌகீக இன்பம் குறித்து, சிந்தனையும், செயலும், முயற்சியும் இருந்துவிட்டால்
அதனைத்தாண்டி செல்ல இயலாமல் போய்விடும். விளக்குங்கால்இந்த உலகத்தில் இருந்துகொண்டு இந்த
உலக இன்பங்களை, இந்த உலகம் சார்ந்த விஷயங்களை ஏற்கவேண்டாம், நுகரவேண்டாம் என்றால்
அது எங்ஙனம் சாத்தியம் ? பின் எதற்கு உலகம் ? பின் எதற்கு இந்த தேகம் ? என்றெல்லாம் மாந்தனுக்கு ஐயம் எழலாம். மெய்தான். இந்த உலகம்
ஒரு மெய்போல் தோற்றம் அளித்திட்டாலும் அது மெய்யல்ல என்பதை புரிந்துகொள்ளும்
வண்ணமே மனித வாழ்வு அமைக்கப்பட்டிருக்கிறது. இறைவனின் கருணையாலே இதை உணர்ந்துகொள்ள
ஒவ்வொரு ஆத்மாவும் சிறிதளவேனும் முயற்சி செய்திடவேண்டும். இயம்புங்கால் வாழ்வு
நிலை கர்மவினைகளின் அடிப்படையில் எங்ஙனம் அமைந்திட்டாலும் உயர் பதவியோ, செல்வமோ,
நல் தேகமோ என்று எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மனோரீதியாக இறை நோக்கிய சிந்தனையோடு
ஒரு மனிதன் வாழ்ந்தால்தான், அதிலும் தடையற்ற பக்தியும், தெய்வீக ஞானத்தை
புரிந்துகொள்ள முயற்சி செய்வதும், தளராத தர்மத்தையும் கடைபிடித்தால்தான் அவன்
மெய்வாழ்வு வாழ்கிறான் என்பது பொருளாகும்.
ஆகிடுமே ! இஃதொப்ப சிந்தனைகளையெல்லாம் பல்வேறு மகான்களை
அனுப்பி காலகாலம் இறைவன் எஃதாவது ஒரு வழிமுறையில் செயல்படுத்திக் கொண்டுதான்
இருக்கிறார். ஆயினும்கூட மனிதர்களால் பல்வேறு தருணங்களில் இந்த மாய லோகத்தின்
சக்தியை மீற இயலவில்லை. ஆயினும் தொடர்ந்து அதுகுறித்த சிந்தனையும், செயலும்
இருந்திட்டால் அடுத்தடுத்த பிறவிகளில் மாயையை வென்று மெய் மனிதனாக, மனிதனில் புனிதனாக, புனிதனோடு மாமனிதனாக,
இறுதியில் சித்தனாகக்கூட வாய்ப்பிருக்கிறது. ‘ அங்ஙனம் ஏன் ஆகவேண்டும் ? ‘ என்றொரு ஐயம் எழலாம்.
மனிதரீதியாகக் கூறுங்கால் மனிதன் பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறான்.
அங்ஙனம் பார்க்கும்பொழுது ஒரு நிலையடைந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி செல்வது மனித
இயல்பாகிவிட்டது. அப்படியே தாண்டிக்கொண்டு செல்லும் பட்சத்திலே, ‘ எந்த நிலையை
அடைந்துவிட்டால் அதனைத்தாண்டிய ஒரு நிலை இல்லை ‘ என்கின்ற எல்லை வந்துவிடுகிறதோ
அந்த நிலைவரை மனிதன் ஓடியாகவேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத ஒரு நிரந்தர சுக
அனுபவத்தை ஆன்மா பெறவேண்டுமென்றால் அது மெய்யான இறை சார்ந்த, அது தொடர்பான செயலாக
இருந்தால் மட்டுமே சாத்தியம். அதுவன்றி தேகம் தொடர்பான கல்வியும், தேகத்தைப்
பேணிக் காக்கவேண்டிய நிலையில் செயல்படக்கூடிய எந்த விஷயமும் ஒரு நிலைக்குமேல் பலன்
தராது. அங்ஙனமாயின் தேகத்தை விட்டுவிட
வேண்டுமா ? என்றால் கூடாது. தேகத்தை இந்த ஆத்மா வசிக்கும் கூடாக எண்ணி முறையாக
பராமரிப்பது அவசியம். ஆனால் அதிலேயே மூழ்கிவிடக்கூடாது என்பதே மெய்ஞான அனுபவம்.
No comments:
Post a Comment