எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 28, 2020

அகத்தியெம்பிரானின் அருளுரைகள் - 3


தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா ?

இறைவன் அருளாலே இஃதொப்ப லோகாய விஷயங்கள் எதுவும் வேண்டாம். இறைவன் தரிசனம்தான் வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் அடுத்த கணம் இறை தரிசனமும், எம் தரிசனமும் அனைவருக்கும் உண்டப்பா. இறைவன் தரிசனம் இல்லையென்றால் என்ன பொருள் ? என்றால் இறைவனை பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் யாரும் செல்வதில்லை. ‘ எனக்கு இந்த பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை தீர்த்துக் கொடு ‘ என்றுதான் இறைவனிடம் எல்லோரும் செல்கிறார்கள். எனவே இறைவனை பார்க்க வேண்டும் என்று யாராவது உண்மையாக சென்றால் கட்டாயம்
இறை தரிசனமும், சித்தர்களின் தரிசனமும் கிடைக்கும்.


ஆதியிலே பாவ வினைகள் எப்படி ஏற்பட்டது ?


பாவம் என்பதே, பரம்பொருள் ஏகனாக இருக்கும்பொழுது சகலமும் பரம் என்ற நிலையில் இல்லை. பரம் தன்னுடைய தரம் தாழும் என்று அறிந்தோ, அறியாமலேயோ தன்னிடமிருந்து சிறிய, சிறிய ஆத்மாக்களையெல்லாம் பிரித்து அனுப்பும்பொழுதே அங்கே பாவங்கள் உற்பத்தியாகிவிடுகிறது. எல்லாவகையிலும் சுகத்தையும், எல்லா வகையிலும் உயர்வையும் தந்து ஒரு பிறவியை முதலில் படைக்கும்பொழுதே ‘ தனக்கு இவ்வாறெல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது, பிறருக்கு நன்மைகளை செய்வதற்குதான் ‘ என்று மனிதனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களோ சமயத்தில்புரிந்துகொள்ளாமல் ஆணவத்தால் தவறுகள் இழைக்கும்பொழுது அங்கே முதல் பாவம் தோன்றுகிறது. அந்த முதல் பாவத்தால் சற்றே தரம் குறைந்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கே பாவத்தை நீக்குவதற்கு வாய்ப்புகள் தந்தாலும் நீக்குவதற்கு பதிலாக, மேலும், மேலும் பாவங்களை சேர்த்துக் கொள்ள, அடுத்தடுத்து பிறவிகள் சங்கிலி போல நீள்கிறது.



அப்படியென்றால் பிரபஞ்சத்தில் அனைவரும் திருந்தி வாழ வழியே இல்லையா ?
அதற்கு வழிகாட்டினால் அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை.



இறைவன் கருணையால் ஒருவன் இறைவனை பூஜிக்கிறான் அல்லது இறைவனை எஃதாவது அபவாதமாக பேசுகிறான். இறைவன் இருப்பதை ஒத்துகொள்கிறான். ஆனால் ஏதோ ஒரு சினத்திலே இறைவனை அப்படி தூஷிக்கிறான். அதை சராசரி மனிதன் செய்தால் இறைவனோ, மகான்களோ, மற்றவர்களோ அவன் அறியாமையில் இருக்கிறான் என்று பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பலகோடி தவங்கள் செய்து, மனிதனைவிட பல மடங்கு உயர்ந்த நிலையில் தேவனாகவோ, யக்ஷனாகவோ இருக்கக்கூடிய ஒருவன் எஃதாவது ஒரு சிறிய வருத்தத்தால் இறைவனை தூஷித்து ஆனால் மற்ற தேவதைகளை மகிழ்விப்பதற்காக யாகங்கள் செய்தால் “ இறைவனை தூஷிக்கிறானே, நாமெல்லாம் யாகத்திற்கு செல்லக்கூடாது “ என்ற சிறிய சிந்தனைகூட யாருக்கும் இராதா ? எதற்காக தக்ஷன் ( செய்த ) யாகத்தில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் ? விதி. நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இறைவனுக்கு அருகில் இருந்தாலும்இறைத்தன்மையை எந்த ஆத்மா பரிபூரணமாக புரிந்து கொள்கிறதோ, அது வெறும் பார்வையாளனாகத்தான் இருக்கும். அது எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது. எஃதாவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் தாமரை இலை தண்ணீர் போல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், நீ கூறியதுபோல் பாவம் என்பது வராமல் இருக்கும். ஆனால் அதிலேயே மூழ்கிவிட வேண்டிய நிலையில் மனிதனோ, தேவர்களோ, மற்ற தேவதைகளோ ஈடுபடுவதால்தான் இஃதொப்ப நிலை உருவாகிறது.



அகத்தியெம்பிரானின் அருளுரைகள் - 2


சிசு ஹத்தி பற்றி ஒரு கேள்விக்கு அகத்தியர்
 அளித்த விடை

சிசு ஹத்தி என்று மனித குழந்தையை மட்டும் நீ கூறுகிறாய்.கொடுமையான சிசு ஹத்தி  என்று எத்தனயோ இருக்கிறது தெரியுமா ?.

மிக மிக இளம் தளிராக இருக்கின்ற, பசுமை மாறாமல் இருக்கின்ற ஒரு சிறு இலையை கிள்ளினால்  
ஆயிரத்து எட்டு சிசுவை கொன்றதற்கு சமம் தெரியுமா ?
ஒரே ஒரு மலர் மொட்டை
 ஒருவன் கொய்தால் அது பத்தாயிரத்து  எட்டு பிறந்த குழந்தையை கொள்வதற்கு சமம்.  

இப்படியானால் பார்த்துகொள் ஒரு மனிதன் எத்தனை வகையான 
சிசு ஹத்தி பாவத்தை சுமந்து கொண்டு செல்கிறான். 
இதனையும் மீறி மனிதன்  ஜீவித்து இருக்கிறான் என்றால் 
இறைவனின் பெரும் கருணையால் தான். 
 எனவே  குழந்தைபூமிக்கு வந்த பிறகு கொன்றால் தான் பாவம், கருவிலே 
கொன்றால் பாவம் இல்லை என்று எண்ணிகொண்டிருக்கிறான்.  எந்த 
நிலையிலும் அது பிரம்ம ஹத்தி தோஷமாக உருவெடுத்து மனிதனை 
வாட்டி கொண்டுதான் இருக்கும்.  எனவே விழிப்புணர்வோடு இருந்து 
இதிலிருந்து மனிதன் தன்னை, தன் குடும்பத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

அறியாமல் செய்திருந்தால் எத்தனை ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்க முடியுமோ ஆதரித்து இந்த தோஷத்தைநீக்கி கொள்ள வேண்டும்.  
எத்தனை பசுவோடு கன்றுகளை தானம் அளித்து 
இந்த தோஷத்தை குறைத்து 
கொள்ள வேண்டுமோ, குறைத்து கொள்ள வேண்டும்.  எந்த அளவிற்கு   சிவாலயங்களில் நெய் தீபம் ஏற்றி குறைத்து கொள்ளவேண்டுமோ,
 குறைத்து கொள்ள வேண்டும்வாய்ப்பு உள்ளவர்கள் 
சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும், வாழ்க்கைக்கு பிறகும், நிரந்தரமாக பூஜிப்பதற்கு ஒரு 
ஏற்பாட்டை செய்ய வேண்டும்.  இகுதப்பசெய்வதோடு ஆயிரமாயிரம் 
விருட்சங்களை தானம் செய்வதும் அதனை நட்டு பராமரித்து நிழல் தரும் விருட்சங்களாக மாற்றுவதும் என்று ஒரு தொண்டை செய்தால் இந்த ஹத்தி தோஷம் நீங்கி விடும். மனிதன் செய்யும் சிறு தவறுக்குக் கூட பெரிய அளவில் தண்டனை கிடைக்கும் எனும்பொழுது, ஒருவன் செய்யும் சிறு புண்ணியமும் பன்மடங்காகப் பெருகுமா ?


இறைவன் அருளால், தெரியாமல் பாவம் செய்தாலும், தெரிந்து செய்தாலும் விளைவு ஒன்றுதான். சிறு பாவமும் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்காக சிறு புண்ணியம் பெரிய அளவில் நன்மைகளைத் தரும் என்று நாங்கள் கூறுவதற்கில்லை. ஒருவேளை அப்படிக் கூறுவதாகக் கொண்டால் மனிதன் என்ன செய்வான் ? எப்பொழுதுமே சிறிய புண்ணியங்களைத்தான் செய்யத் துவங்குவான். இன்னொன்று, புண்ணியம் என்பது செய்கின்ற மனிதனின் மனதைப் பொறுத்ததுதான், அளவைப் பொறுத்ததல்ல. ஒரு கோடி தனத்தை ஒருவனிடம் தந்துவிட்டு உள்ளத்திலே ‘ வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கெல்லாம் செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்துவிட்டதே ? இவனுக்கெல்லாம் ஏன் செய்ய வேண்டும் ? இவன் என் கண்ணில் படாமல் இருந்திருக்கக் கூடாதா ? இவன் இல்லாமல் ஒழிந்துபோகக் கூடாதா ? இந்த தனத்தை எதற்காக தரவேண்டும் ? ‘ என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஒரு கோடி தனம் தந்தாலும் பலனில்லை. ஆனால் உளமார ஒரு சிறு தனத்தைத் தந்தாலும் அது மலைபோன்ற புண்ணியமாகப் பெருகும். அடுத்தது செய்கின்ற அந்த நாழிகை. தக்க காலத்தில், தக்க சூழலில், தக்க நேரத்தில் செய்யப்படுகின்ற உதவி, மிகப்பெரிய உதவியாகும். இதைதான் வள்ளுவன் “ காலத்தினால் செய்த உதவி…“ என்று கூறியிருக்கிறான். இஃதொப்ப உதவி அல்லது புண்ணியம் என்பது செய்கின்ற அளவைவிட, செய்கின்ற உள்ளத்தைப் பொறுத்தது. பெறக்கூடிய மனிதனின் தேவையையும், மனதையும், வாழ்வியல் சூழலையும் பொருத்ததாகும். 

அகத்தியெம்பிரானின் அருளுரைகள் – 1


இறையிடமும், எம்மிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலெல்லாம் அறிவை பயன்படுத்தாத மனிதன், எம்மிடம் வரும்பொழுது மட்டும்தான் ஏன் ? எதற்கு ? எப்படி ? இதை எப்படி ஏற்பது ? இதற்கும், நடைமுறைக்கும் முரணாக இருக்கிறதே ? இப்படியெல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே ? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்திபோல் சிந்திக்கிறான். இல்லையில்லை, அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.

இறைவன் அருளால், இதைப் போல காஞ்சியிலே கைலாசநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கே தவழ்ந்து வந்தால் ஒரு பிறவி போய்விடும் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொரு ஆலயத்திலே ஸ்தல விருக்ஷம் இருக்கிறது. அதனை சுற்றி வந்தால் பல பிறவிகள் போய்விடுகிறது என்று கூறுகிறார்கள். இன்னொரு ஆலயத்திற்கு ஒரு முறை சென்று இறை நாமத்தை ஒரு முறை ஜெபித்தாலே கோடி முறை ஜபித்த பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் இறைவனின் பெருமையை பறைசாற்றுவதற்காக மனிதர்களால் கூறப்பட்டது. பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்துவிட்டு நீ கூறிய இடுக்கின் வழியாக ஒருவன் வெளியே வந்தால் அவனுக்கென்ன முக்தி கிடைக்குமா ? மோக்ஷம் கிடைக்குமா ? ( முதலில் ) ஒருவனின் நடைமுறை வாழ்க்கையிலே சாத்வீகமும், சத்தியமும், தர்மமும், பக்தியும்தான் இருக்க வேண்டும். மற்ற புற சடங்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.


இறைவனின் கருணையால் மனித ஆண்டு கணக்கு வேறு, தேவ ஆண்டு கணக்கு என்பது வேறு என்பது பலர் அறிந்ததுதான். இஃதொப்ப நிலையிலே முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆண்டு என்பதும் வேறு, வேறு நிலைதான். 3000 ஆண்டுகள் என்பதை மனிதரீதியாக பார்க்கக்கூடாது. அது தேவ ஆண்டுகளைவிட மிக அதிக கணக்கு. எனவே சூட்சுமமான நிலையில் அன்னவன் ( திருமூலன் ) இயற்றிய தவமாகும். மனித சக்தியால் அதை புரிந்துகொள்வது என்பது மிக கடினம். அதுமட்டுமல்ல. இதுபோன்ற ஞான நிலையை அடைந்த, சித்த நிலையை அடைந்தவர்கள் கூறுகின்ற வாக்கியங்களையும் நேருக்கு நேர் பொருள் கொள்வது என்பது கடினம். பாவங்கள் குறைந்த ஆத்மா வாசித்தால், ஓதினால் அப்பொழுது வருகின்ற பொருளே மெய்ப்பொருளாகும்.

வாசி யோகம் பற்றி :

இறைவனின் அருளைக்கொண்டு, யோகம் என்பது மனிதர்களால் பல்வேறுவிதமாக கையாளப்படுகிறது. ஒருவன் நல்ல ஆரோக்யமான உடலை பெற்று நல்ல பதவியில் இருந்தால், பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தால்        ‘ அவனுக்கென்னப்பா, யோகக்காரன் ‘ என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் யோகம் என்பதைவிட ஏகம் என்பதே சரியான பொருளாக இருக்கும். ஏகம் என்பது தனித்திருத்தல். தனித்திருத்தல் என்றால் ஏதோ கூட்டங்களை விட்டு ஒதுங்கியிருத்தல் என்று தவறாக எண்ணுகிறார்கள். அப்படியல்ல. உள்ளத்திலிருந்து இந்த உலகைப் பிரித்து தனித்திருத்தல். ஏகமாக இருத்தல். அப்படி ஏகமாக இருக்கும்பொழுதுதான் ஏகனாக இருக்கக்கூடிய அந்த ஏகாம்பரனின் அருள் கிட்டும். அப்படி கிட்டுகின்ற வழிமுறைகளில் ஒன்றுதான் இதுபோன்ற வாசி யோகம், வாசிக் கலை, ப்ராணாயாமம். முதலில் உடலை சரிசெய்யாமல் சுவாசப் பயிற்சியில் சென்றால் தேவையில்லாத பின் விளைவுகள்தான் ஏற்படும். எனவே உடலை நன்றாக, பரிபூரணமாக ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு உடல் ரீதியான சில பயிற்சிகளையெல்லாம் செய்துவிட்டு பிறகு கும்பகம் செய்யாமல், அதாவது மூச்சை உள்ளே நிறுத்தாமல் ஆழ்ந்த சுவாசத்தை அதிகாலையிலே, வாய் வழியாக இல்லாமல், நாசி வழியாக மட்டும் விட பழகிக்கொண்டே வந்தால் பிறகு இன்னவன் கூறுகின்ற வாசிக் கலையானது காலப்போக்கிலே இறையருளால் யாம் கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றிக்கொண்டே வந்தால் சித்தியாகும். 

ஐயப்பன் கோவில்களில் 18 படிகள் வரக் காரணம் என்ன ? 18 என்ற எண்ணிக்கையின் சிறப்பு பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் பொதுவாக 18 என்பது மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்துப்போய்விடுகிறது. அதனால்தான் 18 சித்தர்கள், மகாபாரதத்திலே 18 தினங்கள் யுத்தம், 18 பர்வதங்கள் என்று ஏற்றுக்கொண்டு விட்டான். இதில் சில இல்லாமல் இல்லை. இன்னவன் கூறிய ஹரிஹரபுத்திரனின் அந்த படிகளின் எண்ணிக்கை பதி எண் கணக்கிலே, அந்த இரண்டையும் கூட்டி நவமாக்கி, அந்த நவம் என்பது மனிதனின் தேகத்திலே இருக்கிறது. இந்த நவத்தை வெல்லவேண்டும் என்பதின் பரிபூரண சூட்சுமம்தான் அங்கே படிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று. விக்கிரமாதித்தனின் ஆசனத்தில்கூட பல்வேறு படிகளும், பதுமைகளும் இருந்தன. படி தேவதைகள் என்று இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை சேர்க்க, சேர்க்க ஒரு படி மனிதன் ஏறுகிறான் என்பது தேவ மொழியாகும். இங்கே படிப்படியாக உயர்வது என்பது உலகியல்ரீதியாக, வெளிப்படையாக பொருளாதார வெற்றியை, பதவியை குறிக்கலாம். ஆனால் தேவ ரீதியில், இறை ரீதியில், மகான்கள் ரீதியில் நேற்றைவிட இன்றைய தினம் எந்தளவு பாவத்தைக் குறைத்திருக்கிறான் ? எந்த அளவு புண்ணியத்தை செய்திருக்கிறான் ? எனவே இறைவனை நோக்கி அடுத்தபடியில் இவனை அமர்த்திவிடலாம் என்பதை படி தேவதைகள் தீர்மானித்து அடுத்த நிலைக்கு தள்ளிவிடும். அந்த நிலையிலேயே இருக்கிறானா ? இன்னும் இறைவன் அருளை நோக்கி அடுத்த படிக்கு செல்கிறானா ? என்பதை பார்த்து அந்த படி தேவதை இன்னொரு படிக்கு தள்ளி விடுகிறது. இறுதியாக படிப்படியாக உயர்ந்து அந்தப் பதியிடம் அந்த ஆத்மா செல்வதைதான் உண்மையான சூட்சுமப் படி குறிக்கிறது. இதை அந்த தெய்வத்திற்கு புறச்சடங்காக 18 படிகள் என்று வைத்திருக்கிறார்கள். எல்லா தெய்வங்களுக்கும் இந்த படி நிலை என்பது உண்டு. இதனால்தான் மலைகளில் ஏராளமான படிகள் வைத்து அந்தப் படிகளில் ஏறி, இறங்கினால் இறையருள் என்று வைத்திருக்கிறார்கள். இறை அருள் என்பது பிறகு. உடல் ஆரோக்கியம் என்பது முதலில். அந்தப் படி தேவதைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு படியின் அடியிலும் பல ரிஷிகளும், மகான்களும் தவம் செய்து கொண்டு “ இதோ ! என் மேல் ஏறிப் போகிறானே ? இந்த மனிதனின் பாவங்கள் இத்தனை இருக்கிறது. இவன் இத்தனை, இத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறான். இறைவா ! இப்பொழுதுகூட இவன் தன்னை உணராமல் ஏதோ சுற்றுலா போல்தான் இங்கு வந்திருக்கிறான். இவன் அறியாமையை நீக்கிவிடு. வேண்டுமானால் இவன் பாவங்களை நான் எடுத்துக் கொள்கிறேன் “ என்று ஒவ்வொரு படியின் அடியிலும் அமர்ந்திருக்கும் மகான் ஒவ்வொரு தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். எனவே அந்தப் படி என்பது சாதாரண விஷயமல்ல. படிப்படியாக மேலே செல்வதைக் குறிக்கும். பின்னால் இதனை நீ படிப்படியாக புரிந்துகொள்ளலாம்.

படிப்படியாக பலவற்றை நாங்கள் கூறினாலும், படிப்படி என்று நாங்கள் கூறும்பொழுது அது பல பேருக்கு அந்த படிப்படி என்பது புரியாமல்தான் போய்விடுகிறது. படி, படி என்று குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் கூறுவது குழந்தைகளுக்கு பிடிக்காதது போல நாங்கள் பல படிகளைக் கூறும்பொழுது மனிதர்களுக்கும் படிப்படி என்பது பிடிக்காமல் போய்விடுகிறது. படிப்படியாக பலவற்றை நாங்கள் கூறுகிறோம். அதனை படிப்படியாக பதிவு செய்து படிப்படியாக மேலே ஏறி அந்தப் படியின் உச்சியிலிருக்கும் பதியிடம் அனைவரும் சேர வேண்டும் என்று நல்லாசி கூறி, படிப்படியாக இன்னும் மேலே உயர நாங்கள் அந்த எம்பிரானை வணங்கி, இப்பொழுது சற்றே அயர்வு தந்து மேலும் படிப்படியாக வாக்குகளை பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு, சத்சங்கத்திற்குப் பிறகு இறையருளால் யாங்கள் கூறுவோம் என்று கூறி படிப்படியாக அனைவரும் உயர நல்லாசிகள்.